Sunday, March 15, 2009

புலிக்காச்சலும் பாகப்பிரிவினையும்


வன்னி மண்ணை இரத்தம் தோய்க்கும் ஈரம் காயும் முன்னர் புகலிடப் புரட்சி வாதிகளும் புத்திசாலிகளுமாய்த் தம்மை எண்ணிக்கொள்பவர்களும் ஓச்சலொழிவு இன்றி தட்டச்சி தம் பிரகடனங்களை வெளியிடத் தொடங்கிவிட்டார்கள். தேர்தல் காலக் காச்சலில் ஓடி அணி சேர்ந்து கொள்ளமுடியா சொரியல் கட்சிகள் மூன்றாம் அணியைத் தேடிக் கொள்வதைப்போல இவர்களும் மூன்றாம் அணியைத் தேடி தம்மிடையில் யுத்தம் புரியத் தொடங்கி விட்டார்கள்.

புலிகளுக்கு சேடம் இழுக்கத் தொடங்கிவிட்டது . அவர்களுடைய இறுதி இன்னும் சில வாரங்களில் நிகழ்ந்து விடும் என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டு வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கிவிட்டார்கள்.

புலிஆதரவு தளத்தை இனி செல்லாக்காசெனப் புறந்தள்ளியதைப்போலவே புலியெதிர்ப்பு அணியையும் புலியெதிர்ப்பு அன்றிப் "புரட்சிகரம்" இல்லாதவர்கள் என்ற சொல்லடையால் சுலபமாக போட்டிக்களத்தில் இருந்து அகற்றி விட்டுத் தம்மைத்தாமே முன்னிலைப்படுத்தத் தொடங்கியுள்ளனர் இவர்கள்.

முன்னிலைப்படுத்துவதுடன் மூன்றாம் அணியின் மூக்கணாங்கயிற்றை கைப்பற்றும் போட்டியில் மூர்க்கத்துடன் களமிறங்கியுள்ளனர். இதே வேளை தனிப்பட்ட புரட்சிக்காரரையும் பொருட்டாய்க் கொள்ளாத தன்மையுடன் தம்மைச்சுற்றி சில பல அடிப்பொடித்தொண்டரைக் கொண்ட இக்குழுவாதிகள் அவர்கள் கூறுவதைப்போல இது வரை செய்து வந்த புரட்சிகர அரசியல்தான் என்ன?

பத்தியெழுத்தாளர்களாக தம்மை வெளிக்காட்டி சில பல "ஆஹா" பேஷ்.. பேஷ்" போன்ற ஜால்ரா கிலாகிப்புகளைப் பெற்றுக் கொண்டது தான் அவர்கள் செய்த புரட்சிகரம். போராடும் மக்களை விட்டு தப்பிப்பிழைத்து ஓடி ஒழித்து வந்து ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் சில பல பியர்களைக் குடித்து மூளையைச் சூடேற்றி எழுதிக்குவித்தவை தான் அவர்களின் சொற்களில் "புரட்சி" என்பது.

வட்டுக்கோட்டைத்தீர்மானத்தின் பின் தனித்தமிழீழக் கோரிக்கையில் முளைத்தெழுந்த காளான் இயக்கங்களின் பெயர்கூட அறியாது வள்ளமேறி கோடியாக்கரையில் இறங்கியவர்கள். முட்காடாய் தமிழகம் எங்கும் முளைத்தெழுந்த காம்புகளில் முளைத்தது தான் இப்புரட்சிகர அரசியல்.

மார்க்ஸையும் ஏங்கல்ஸையும் அது வரை அறியாத தெரிந்தெடுக்கப்பட்ட இவர்களின் மூளையில் அடைக்கப்பட்டவை தான் புரட்சி கரக் கருத்துக்கள். அதுவும் தமிழ்க்கூட்டணி போன்ற சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளின் இறகுச் சூட்டில் குளிர்காய்ந்த இளைஞரணியின் அங்கத்தவர்களைத் தலைவர்களாய்க் கொண்ட இவ்வியக்கங்களின் புது லேபல்களாய் வந்து சேர்ந்ததே இப்புரட்சிகர மார்க்ஸிய லெனினிய ரொக்ஸிய வாதங்களும் வாய்ப்புரட்டுகளும்.

அக்காலத்து யாழ்ப்பாணத்திய சண்முகதாசனின் கம்யூனிஸப்பாதிப்போ சீன மாவோவிஸ வாதிகளின் நிழல்களோ பாரம் பரியமாகவோ இல்லாத இவர்களால் யாழ்ப்பாணத்திய சாதீயக் கட்டுக்கோப்பையும் பொருள் முதல் வாதப்போக்கையும் உடைக்க முடியாது அவையெல்லாம் முனை மழுங்கிப்போன சரித்திரம் தெரிந்து கொள்ள முடியாது போனதில் ஆச்சரியமொன்றுமில்லை.

சோவியத் புரட்சி வெற்றித் தாக்கத்தில் பூர்ஷுவாக்களை எதிர்க்க வீறுகொண்டெழுந்த சீனப்புரட்சி விவசாயத்தொழிலாளர்களை உட்கொண்டதால் தடம் மாறி மாவோயிஸமாக தன்னை வளர்த்துக் கொண்டது. அதையும் விட வீரியம் மிக்க பிரச்சினையாக சாதீய பொருளாதார அமைப்பையும் பணபலற்ற தொழில் வாய்ப்பற்ற உதிரிக் கூலித் தொழிலாளர்களையும் கொண்ட யாழ்ப்பாண தீபகற்பத்தில் எதைச் சாதிக்க விழைகின்றார்களோ.

கூர்மையான ஆயுதத்தின் முன் அடங்கி நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும் இம்முரண்பாடுகளின் முன்னால் இவர்கள் இன்னுமொரு முறை தோத்துப் போவார்கள். முதல் தோல்வி மார்க்ஸிய சிந்தனையுடன் புரட்சிகர ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்கையில் நேர்ந்ததை நாம் அறிவோம்.

புரட்சிகரப்போராட்டத்தின் கனவுகள் உட்கட்சி முரண்பாடுகளிலும் தலைமைகளின் முகமூடி கிழிக்கப்பட்டு அம்பலமானதிலும் நொருங்கிப்போய் பர தேசங்களுக்கு மூட்டை முடிச்சுகளுடன் ஓடிச்சேர்ந்தவர்கள் மூளைகளில் அளவு கணக்கின்றி அடைக்கப்பட்ட தத்துவ மூட்டைகள் அரிப்பெடுத்தபோது சஞ்சிகைகள் எழுதத் தொடங்கினார்கள்.

புற்றீசல் போலப்புகலிட இலக்கியங்களாக வெளிக்கிட்ட இப்புத்தகங்கள் மார்க்ஸியப் புழுகுகளுடன் பெண்ணீயம் சாதீயம் என்று பல கிளைகளில் தாவிப்பாய்ந்து தமிழக தலித்தியத்தையும் கடன் வாங்கிக் கொண்டது. இவர்களின் மூளைச்சூடு கொதி நிலையடைந்து தனி மனிதத் தாக்குதல்களையும் விரிவாக்கி முற்போக்குவாதம் பிற்போக்குவாதம் என்று விரிவடைந்து சென்றது.

பெண்விடுதலையை கடன் வாங்கிக் கொண்ட பல பெண்களும் கட்டுடைத்தல் என்னும் போர்வையில் கணவர்களையும் மாற்றிக்கொண்டது சுவாரஷ்யமான சம்பவங்கள். அதி நவீனத் தத்துவவாதிகளாகத் தம்மை அடையாளங் காட்ட ஆசைப்பட்ட சில ஆண்கள் தமிழகக் கள்ளுக்கடைகளிலெல்லாம் தலித்தியம் பேசி தண்ணி அடித்துத் திரிந்தது ஒரு காலம்.

யாழ்ப்பாணத்தில் சிரட்டையிலும் மூக்குப்பேணியிலும் தண்ணீர் கொடுத்த சாதீய மான்கள் எல்லாம் தலித்தியம் சாதீயம் பேசி தலித்திய மகாநாட்டை ஐரோப்பிய வீதிகளுக்கு இறக்கு மதி செய்தது தான் இவர்கள் செய்த புரட்சி. மேலை நாட்டு வாழ்க்கை முறையிலும் அவசர கதியிலும் மறக்கப்பட்டு வந்த இம்மனிதப்பண்புகள் அற்ற நடைமுறைகளைத் தோண்டி எடுத்து தோரணங் கட்டி விட்டது தான் இவர்களின் புரட்சி.

இப்புரட்சி வாதிகளும் ஜனநாயக மறுப்புக்கெதிராகப் போராடியதாய் தம்மை அடையாளங் காட்டிக் கொண்டவர்களும் ஈழத்தமிழ் மக்களை ஆட்சி செய்யும் சிம்மாசன்க் கனவுகளுடன் அக்கப்போரில் இறங்கியுள்ளார்கள்.

இவர்களில் யாரும் இதுவரை தமிழ் மக்களின் துயரங்களைப்போக்கடிக்கும் நடவடிக்கைகளிலோ துயரங்களைத் தந்த சிங்களப் பேரினவாதிகளின் மீதோ அதன் பின்னணியில் கால்கோளாகவிருக்கும் இந்திய வல்லாதிக்கத்தின் மீதோ ஒரு சிறு துரும்பையும் எடுத்துப்போடவில்லை என்பது தான் துரதிர்ஷ்டம்.

அதே வேளை புலியெதிர்ப்பு என்ற போர்வையில் அவர்களின் அழிவுடன் மக்களின் அழிவையும் நியாயப்படுத்தி சந்தோஷப்பட்ட பாசிசவாதிகளும் இவர்கள் தான்.

யாராவது இவர்களைப்பற்றி எழுதத் துணிந்தாலோ கேள்வி கேட்க முற்பட்டாலோ புலிப்பாசிஸம் அல்லது தனி மனிதத் தாக்குதல் என்று கூறி நழுவிக்கொள்வார்கள். இவர்களை நம்பினால் ஈழமக்களின் தலையெழுத்தை அந்த ஆண்டவனால்க் கூட காப்பாற்ற முடியாது.

2 comments:

லோயர் said...

வலைப்பூக்களில் உள்ள பலபேர் வாசிக்க வேண்டிய அறிக்கைல்...களவாணி!!! உண்மைய சொன்ன உமக்கு சிலபேரால் புலி பட்டமும்... சிலபேரால் யாழ்ப்பான மேல்வர்க்கம் என்ற பட்டமும் விரைவில் கிடைக்கும்

இட்டாலி வடை said...

லோயர்!

பட்டங்கள் தான் இப்போ மலிவாகக் கிடைக்கின்றனவே ..அப்படி ஒரு காலம் இது.

Post a Comment