Monday, March 2, 2009

இவர்கள் இப்படி

முதல்வர் கருணாநிதி:

Karunanidhi

"விடுதலைப் புலிகளின் போர் நிறுத்தத்தை ஏற்று, இலங்கை அரசும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசியிருப்பது நெஞ்சத்து அனலைத் தணித்து ஆறுதல் பூங்காற்றாய் வீச செய்திருக்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்."


இலங்கை வெளிவிவகார செயலாளர் கலாநிதி பாலித கோஹண:

விடுதலைப் புலிகளுடன் யுத்தநிறுத்தம் மேற்கொள்ளுமாறு இந்தியாவால் புதிதாக விடுக்கப்பட்ட அழைப்புகளை கொழும்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை நிராகரித்துள்ளது.

சரணடையுமாறு சர்வதேச ரீதியாக விடுக்கப்படும் கோரிக்கைகளை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டால் யுத்தநிறுத்தம் தேவைப்படாததாக அமையும் என்று வெளிவிவகார செயலாளர் கலாநிதி பாலித கோஹண ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தால் சண்டை இராது. மோதல் தானாகவே நின்றுவிடும் என்று கலாநிதி கோஹண கூறியுள்ளார்.

மோதல்களை நிறுத்துமாறு இந்தியா நேற்றுமுன்தினம் சனிக்கிழமை விடுத்திருக்கும் அழைப்புத் தொடர்பாகவே பாலித கோஹண இதனை தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் மனிதாபிமான நெருக்கடி தொடர்பாக இந்தியா ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது என்று தூத்துக்குடியில் வைத்து இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்ததுடன் ஒவ்வொரு நாளும் நெருக்கடி தீவிரமடைந்து வருவதாகவும் கூறியிருந்தார்.

முதல்வர் கருணாநிதி:

Karunanidhi

இலங்கையில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக இந்தியாவின் இந்த பொறுப்பான வேண்டுகோளை இலங்கை அரசும், மற்றவர்களும் ஏற்று கொள்வார்கள் என்று நம்புகிறேன்''.

பிரணாப் இப்படி பேசியது மட்டுமல்ல; டெல்லியிலிருந்து அறிக்கையாகவும் இதை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வழிகாட்டும் தலைவர் சோனியா காந்தி கருத்தும்- இந்திய பிரதமர் மன்மோகன்சிங் கருத்தும் கலந்திருக்கின்றன என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?
இலங்கை வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சம்பிக்க ரணவக்க:



விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள யுத்த நிறுத்தத்தை இலங்கை அரசாங்கம் ஏற்க வேண்டுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளமை குறித்தும் ஐ.நா. சபையில் ஹோம்ஸ் வெளியிட்ட தகவல்கள் தொடர்பிலும் அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கையிலேயே சுற்றுச் சூழல் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: "விடுதலைப் புலிகள் தோல்வியின் விளிம்பில் உள்ளனர். இந்தச் சூழலில் யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. புலிகளின் யுத்த நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்துவது உலகளவில் அந்நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும். இதற்கு முன்பும் இந்தியா பலாத்காரத்தைப் பிரயோகித்துப் பிரபாகரனைப் பாதுகாத்தது. அதே செயலை இன்றும் செய்வதற்கு முனைந்தால் 1987 ஆம் ஆண்டைப் போன்று தேசப்பற்றாளர்கள் இந்தியாவுக்கு எதிராக வீதியில் இறங்குவார்கள். இந்திய எதிர்ப்புப் போராட்டங்கள் வெடிக்கும்.


முதல்வர் கருணாநிதி:

Karunanidhi

இந்த உலகில் பெரிய தேசமாம்-இந்திய நாடு கேட்கிறது- பிரணாப் முகர்ஜி கேட்டுள்ளார்- இந்திய அரசு கேட்கிறது-நாமும் கேட்கிறோம்; "போரை நிறுத்து போரை நிறுத்து'' என்று! மத்திய அரசிடம் இருந்து புறப்பட்டுள்ளது அந்த வாசகம்- அதுவும் மார்ச் முதல் நாள்

இலங்கை வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சம்பிக்க ரணவக்க:


விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் பாதுகாக்க இந்தியா பலாத்காரத்தைப் பிரயோகிக்குமானால் 1987 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூழ்நிலை உருவாகும். தேசப்பற்றாளர்கள் இந்தியாவுக்கு எதிராக வீதியில் இறங்குவார்கள். சீனா, ரஷ்யா, வியட்நாம் ஆகிய நாடுகளின் ஆதரவு எமக்கிருக்கின்றது. எனவே ஐ.நா. பாதுகாப்பு சபையில் எந்தப் பிரேரணை கொண்டு வந்தாலும் இலங்கையை அசைக்க முடியாது என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.


முதல்வர் கருணாநிதி:

Karunanidhi

இந்நாளில்- அனைவரும் அகமும் பகையும் புகையும் அகன்று; அன்பகங்களாக மாறட்டும்! அந்த ஆசையுடன்; வலி நீங்கிய ஆறுதலுடன்- வருகிறேன் உடன்பிறப்புகளே! உமை வாரியணைத்து மகிழ்ந்திட வருகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி :

புலிகள் மீது அனுதாபம் கொண்டல்ல, மக்களின் பாதுகாப்புக்காக என்கிறார் முகர்ஜி

அதேவேளை, விடுதலைப் புலிகள் மீது இந்தியா அனுதாபம் காட்டவில்லையெனவும் புதுடில்லி குறிப்பிட்டுள்ளது.

கிழக்கிந்திய நகரமான கொல்கத்தாவில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று இதனைத் தெரிவித்திருக்கிறார்.

விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பாகும். எந்தவொரு பயங்கரவாத அமைப்பு மீதும் எமக்கு அனுதாபம் கிடையாது என்று கூறியுள்ள முகர்ஜி மோதலுக்கிடையில் சிக்கியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு புலிகளின் யுத்த நிறுத்த அழைப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியதாக பி.ரி.ஐ.செய்திச் சேவை நேற்று மாலை தெரிவித்தது.

இராணுவ வெற்றியினால் இறுதித் தீர்வு தங்கி இருக்கவில்லை. அதிகாரப் பகிர்வும் இலங்கை அரசியலமைப்பில் திருத்தங்களை அமுல்படுத்துவதிலுமே இறுதித் தீர்வு தங்கியிருப்பதாக முகர்ஜி கூறியுள்ளார்.

இலங்கை மோதல்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே முகர்ஜி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


அமெரிக்கா:

இலங்கையில் ஆயுத மோதல் தீவிரமடைந்துள்ளதையடுத்து மனித உரிமைகள் குறித்த அரசின் அக்கறை குறைவடைந்துள்ளது என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் வருடாந்த மனித உரிமை நிலைவரம் குறித்த அறிக்கையிலேயே இலங்கை குறித்து இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.படுகொலைகள், காணாமற்போதல்கள் போன்ற மனித உரிமை மீறல் சம்பவங்களில் இலங்கையில் தமிழ் இளைஞர்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளும் பல்வேறு மனித உரிமை மீறல்களைச் செய்துள்ளனர் எனக் கடுமையாகச் சாடியுள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
ஆயுத மோதல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து இலங்கையில் மனித உரிமைகள் குறித்த அரசின் மதிப்பு குறைவடைந்துள்ளது.
படுகொலைகள், காணாமற் போதல் போன்ற மனித உரிமை மீறல்களால் அதிகளவு பலியாகின்றவர்கள் இளம் தமிழ் ஆண்களே.
இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்படும் கொலைகள், அரசியல் நோக்கம்கொண்ட கொலைகள் என்பனவும் அரசுடன் தொடர்புடைய ஆயுதக்குழுக்கள், சிறுவர்களைப் படையணிகளில் சேர்த்தல், காணாமற் போதல், சட்டவிரோதமாகத் தடுத்து வைத்தல் போன்ற பிரச்சினைகளும் இருக்கின்றன.
அரச சார்பு ஆயுதக்குழுக்கள் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்கள், சித்திரவதை, மிரட்டிப் பணம் பறித்தல் போன்றவற்றில் சட்டத்தின் பிடியிலிருந்து விதிவிலக்கப்பட்ட நிலையில் ஈடுபட்டுள்ளன.
கடந்த வருடம் இராணுவ, பொலிஸ் அல்லது துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த எவரும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்காகத் தண்டிக்கப்படவில்லை.
அரசமைப்புச் சபையை நியமிப்பதற்கு ஜனாதிபதி தவறியுள்ளமையால் முக்கிய ஆணைக்குழுக்களை உருவாக்க முடியாதுள்ளது.
அரசும் அதன் முகவர்களும் கண்மூடித்தனமான சட்டவிரோதப் படுகொலைகளில் ஈடுபடுகின்றனர் என கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
புள்ளி விவரங்களை வெளியிட
ஆணைக்குழு மறுக்கிறது
அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதலில் பொதுமக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இடம்பெற்ற ஆட்லறித் தாக்குதலில் பலர் பலியாகியுள்ளனர்.அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைக்குத் துணை ஆயுதக்குழுக்களைப் பயன்படுத்துகின்றது. இக்குழுவினருடன் தொடர்புடையவர்கள் பல படுகொலைகளில் ஈடுபட்டுள்ளனர் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
அரச அழுத்தங்கள் காரணமாக அரச படைகள் மற்றும் துணை இராணுவக் குழுவினரால் பலவந்தமாகக் காணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மறுத்துள்ளது.
கடந்த வருடம் 500 க்கும் மேற்பட்டவர்கள் காணாமற் போயுள்ளனர்.
சாட்சிகளும், பாதிக்கப்பட்டவர்களும் தமிழ் பேசும் ஆயுததாரிகள் இலக்கத்தகடற்ற வெள்ளை வாகனத்தில் வருவோரால் கடத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கின்றன.
எனினும் அரசு பொதுவாக இக்குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யவில்லை. கடந்த வருடம் பல ஆயிரக்கணக்கானவர்கள் தடுத்துவைக்கப்பட்டனர். எனினும் பலர் 24 மணி நேரத்திற்குள் விடுவிக்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சம்பிக்க ரணவக்க:

இலங்கை இறையாண்மை கொண்ட சுயாதீனமான நாடு. எனவே எமது பிரச்சினையில் தலையிட பிரிட்டனுக்கோ அல்லது வேறெந்த மேற்குலக நாடுகளுக்கோ அதிகாரமில்லை. அவர்களது ஆலோசனைகளைக் கேட்க வேண்டிய தேவையும் எமக்கில்லை. இந்த மேற்குலக நாடுகள் தான் புலிகளுக்கு விமானங்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் வழங்கின. எனவே, மேற்குலக நாடுகளின் பேச்சைக் கேட்க நாம் தயாரில்லை.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இலங்கைக்கு எதிராக எந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் நாம் கவலைப்படப் போவதில்லை. எம்மை அசைக்க முடியாது. சீனா, ரஷ்யா, வியட்நாம் போன்ற நாடுகளின் ஆதரவு எமக்கு இருக்கின்றது." இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் கருணாநிதி:
Karunanidhi

இலங்கை தமிழர்களை வாழ வைப்பதற்கும்- அவர்களின் உரிமைகளை இலங்கையில் நிலைநாட்டுவதற்கும்- தமிழகத்தில் அனைத்து கட்சிகள் சார்பிலும்- அரசு சார்பிலும் எடுத்த முயற்சிகளுக்கும்- எரியுண்டு மாண்ட இனமான ஏந்தல்களின் தியாகத்துக்கும்- தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும்- நேரில் சந்தித்து தமிழகத் தலைவர்கள் வலியுறுத்திய முறையீட்டுக்கும்- பலன் கிடைத்தது என்பது போல;


இலங்கை ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன :



"தமிழ்நாட்டின் அழுத்தம் காரணமாக இந்திய மத்திய அரசாங்கம் ஒரு சில கூற்றுக்களை வெளியிட நேர்கின்றது. ஆனால் இந்தியா எமக்குப் பாதகமாக செயற்படாது என்பது உள்ளார்ந்த ரீதியாக எமக்குத் தெரியும். வரையறுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்தக் காலப் பகுதியில் மக்கள் பெருமளவில் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்" எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். விடுதலை புலிகளின் போர் நிறுத்தக் கோரிக்கையை அரசாங்கம் பயன்படுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளமை குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ
ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசாங்கத்தின் அனைத்து துரோகத்துக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி கூட்டுப்பங்காளியாக உள்ளார் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இரண்டாம் உலகப் போரின் போது, யூத இனத்தையே பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு, படுகொலைகள் நடத்தியதுபோல், இலங்கையில் சிங்கள இனவாத அரசின் கொலைகார அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, தமிழ் இனத்தையே கருவறுக்க முனைந்து, இராணுவத்தின் மூலம் தமிழர்களைக் கொன்று குவிக்கிறான். இந்த தமிழர் இன அழிப்பு இராணுவத் தாக்குதலுக்கு முழுக்க, முழுக்க ஆயுத உதவி செய்தது இந்திய அரசுதான்.

1998 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்கள், டெல்லியில் தான் கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தில், இலங்கையில் தமிழின கொலை நடத்தும் சிங்கள அரசுக்கு இந்தியா எவ்விதமான உதவியும் செய்யாது என்றும், ஆயுதங்களை கொடுக்காது என்றும், ஆயுதங்களை சிறிலங்காவுக்கு விற்பனை செய்வதில்லை என்றும் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவை அறிவித்தார்.

2004 ஆம் ஆண்டுவரை இந்திய அரசு அதனைக் கடைப்பிடித்தது.

சோனியா காந்தியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, மத்தியில் மன்மோகன் சிங் அவர்களை பிரதமராகக் கொண்டு அரசு அமைத்த பின், வாஜ்பாய் அரசு எடுத்த முடிவை காற்றில் பறக்கவிட்டு சிறிலங்கா அரசோடு, இந்திய-சிறிலங்கா கூட்டு இராணுவ ஒப்பந்தம் செய்ய முடிவு எடுத்தது.

2004 ஆம் ஆண்டு நவம்பரில் இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்த நிலையில், அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் ம.தி.மு.க. இடம்பெற்றிருந்த சூழலில், பிரதமரையும், சோனியா காந்தியையும், சரத் பவார், லாலு பிரசாத் யாதவ், பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், அதன் தேசியச் செயலாளர் ராஜா அவர்களையும் மூன்று முறை சந்தித்து எடுத்துக்கொண்ட கடும் முயற்சிகளின் விளைவாக, இந்திய-சிறிலங்கா இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.

ஆனால், ஒரு மாதம் கழித்து கொழும்பு சென்ற அன்றைய வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங் இராணுவ ஒப்பந்தம் செய்யப்படாவிடினும், ஒப்பந்தச் சரத்துகள் நிறைவேற்றப்படும் என்று 2005 ஆம் ஆண்டு ஜனவரி 9 இல் கொழும்பில் அறிவித்தார்.

ஐ.நா. வின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் ஜோன் கோல்ம்ஸ்

ஐ.நா.வின் பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (27.02.09) உரையாற்றிய ஐ.நா. வின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் ஜோன் கோல்ம்ஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மக்கள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை வெளியேற அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்:

தமது வாழ்விடங்களில் அமைதியும், பாதுகாப்பும் வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பம். அதனை விடுத்து விட்டு பாரம்பரியமாக வாழ்ந்து வரும் இடங்களில் இருந்து அவர்களை வெளியேற்ற முயற்சிப்பது வேதனையானது. தீர்வு ஒன்றை காண்பதற்காக 'காசா' பகுதியில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதனை ஐக்கிய நாடுகள் சபை ஆதரிக்குமா? என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவிவில் இருந்து ஒளிபரப்பாகும் 'ரைம்ஸ் நௌவ்' தொலைக்காட்சிக்கு இன்று திங்கட்கிழமை பா.நடேசன் வழங்கிய நேர்காண

ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் ஜோன் கோல்ம்ஸ் வன்னிக்கு வந்து அங்குள்ள மக்களின் நிலமைகளை பார்வையிடுவதற்கும், பொதுமக்கள் இங்கு பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா என்பதை பார்வையிடுவதற்குமான பாதுகாப்பான பயண ஒழுங்குகளை மேற்கொள்ளாதது வருத்தமானது.

வன்னியில் பணியாற்றி வந்த ஐ.நா. மற்றும் தொண்டர் நிறுவனங்கள் போன்றவற்றை அங்கிருந்து வெளியேறும்படி கடந்த வருடம் அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து ஐ.நா. தமிழ் மக்களை கைவிட்டுள்ளது. அதன் பின்னர் அரசு சாட்சிகள் அற்ற நிலையில் தனது போரை நடத்தி வருகின்றது.

தமது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தான் மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். அவர்கள் தாங்கள் வாழும் பிரதேசத்தில் அமைதியும், பாதுகாப்பும் வேண்டும் என விரும்புகின்றனர். ஐ.நா.வின் ஆதரவுடன் சிறிலங்கா அரசு நடத்தி வரும் தடை முகாம்களுக்கு செல்வதற்கு அவர்கள் விரும்பவில்லை. சிறிலங்காவின் இந்த முகாம்களை தடை முகாம்களுக்கு ஒப்பானவை என கடந்த மாதம் 20 ஆம் நாள் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது.

கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் இக்னாரீஃப்:


இலங்கையில் நடைபெற்று வரும் மோதல்களில் நாளாந்தம் அதிக எண்ணிக்கையான மக்கள் கொல்லப்படுகின்றனர்; 2 லட்சத்து 50 ஆயிரம் பொதுமக்கள் போர் நடைபெறும் பகுதிகளில் சிக்கியிருக்கின்றனர்; எனவே உடனடியான போர் நிறுத்தம் அங்கு அவசியமானது என கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் இக்னாரீஃப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மைக்கேல் இக்னாரீஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மனிதாபிமான நெருக்கடிகளை தவிர்ப்பதற்கும் பொதுமக்களின் இழப்புக்களை தவிர்ப்பதற்குமான செயற்பாடுகளை சிறிலங்கா அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மேற்கொள்ள வேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன்.

இலங்கையில் நடைபெற்று வரும் மோதல்களில் நாளாந்தம் அதிக எண்ணிக்கையான மக்கள் கொல்லப்படுகின்றனர். 2 லட்சத்து 50 ஆயிரம் பொதுமக்கள் போர் நடைபெறும் பகுதிகளில் சிக்கியிருக்கின்றனர். எனவே உடனடியான போர் நிறுத்தம் அங்கு அவசியமானது.

இலங்கையில் அரசியல் செயற்பாடுகள் பலப்படவும், மனிதாபிமான பணிகள் முன்னெடுக்கப்படுவதற்குமான பணிகளை அனைத்துலக சமூகம் இணைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

போர் காரணமாக ஆபத்தான சூழ்நிலையில் உள்ள பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் மேலதிக உயிரிழப்புக்களை தடுப்பதற்கும், அங்கு ஒரு அரசியல் எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ஒரு சிறப்பு பிரதிநிதியை அங்கு அனுப்ப வேண்டும்.

பொதுமக்களின் மீதான தாக்குதல்களுக்கும், பயங்கரவாதத்திற்கும் எந்த மன்னிப்பும் கிடையாது. பொதுமக்களை பாதுகாப்பதற்கான தமது அக்கறையை உலகம் காண்பிக்க வேண்டும். நாம் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுடனும், கனடாவில் உள்ள இலங்கை மக்களுடனும் எமது உணர்வுகளை பகிர்ந்து கொள்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆனால் மக்களோ:







No comments:

Post a Comment