Saturday, March 7, 2009

பிழைப்பு வாதமும் "பித்த" வாந்தியும்


புலியெதிர்ப்பு வாதம் பாஸிஸம் பற்றியெல்லாம் எழுதி வந்த நம் "டோலர்கள்" இப்போது பிழைப்பு வாதம் என்ற புதிய பரிணாம வளர்ச்சியை அடைந்திருக்கின்றார்கள்.

முடக்கு வாதம் இடக்கு வாதம் என்ற வாதங்களுள் "பிழைப்புவாதம்" என்ற புதிய தமிழ்ச்சொல்லைக்கண்டு பிடித்து தமிழுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றார்கள் இந்த "டோலர்"கள்.

தமிழக அரசியல் வாதிகளை சொற் சாட்டை கொண்டு விரட்டும் இவர்கள் தமிழ் ,தமிழினவுணர்வு என்பவற்றைக்கொண்டு முகமூடி போட்டு பிழைத்துக் கொள்வதாகவும் கூலிக்குழுக்களை உருவாக்குவதாகவும் குற்றம்சாட்டும் இவர்கள் இருப்பதுவும் அதே "தமிழ்" அரங்கம் தான்.

புலி ஆதரவுப்பிழைப்பு வாதம் புலியெதிர்ப்பு பிழைப்பு வாதம் என்று ஈழ ஆதரவு /எதிர்ப்பு போராட்ட வாதிகள் அனைவரையும் அக்மார்க் முத்திரை குத்திப்புறம் தள்ளுகின்றார்கள்.

//ஆயுதம், பணம், பயிற்சி, அரசியல் என்று, ஒரு இனத்தின் சொந்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்தி, வெறும் கூலிக் குழுக்களின் போராட்டமாக ஈழ ஆதரவு என்ற பெயரில் சிதைத்தனர். இப்படி உருவான கூலிக் குழுக்கள், சொந்த மக்களை ஒடுக்கத் தொடங்கியது.//

ஆயுதம் பணம் பயிற்சி அரசியல் என்பவற்றைக்கொடுப்பதன் மூலம் அல்லது போராடும் குழுக்கள் அவற்றைப்பெறுவதன் மூலம் எவ்வாறு ஒரு இனத்தின் போராட்டத்தை தடுத்து நிறுத்த் முடியும் என்பது புரியவில்லை. இவ்வுதவிகள் ஒரு ஆரம்பக்கட்டத்தில் ஈழத்து இயக்கங்களால் பெறப்பட்டனவேயன்றி பின் நாட்களில் சொந்த முயற்சியிலேயே இயக்கங்கள் வளர்ந்தன.

வியற்நாம் கியூபா பலஸ்தீனம் போன்ற 'விடுதலை" பெற்ற நாடுகளிலேயோ அல்லது விடுதலை வேண்டிய போராட்டத்தில் தொடர்ந்திருக்கும் நாடுகளிலேயோ உள்ள போராளிகளாலும் இத்தகைய உதவிகள் வேறு அமைப்புகளிலிருந்தோ நாடுகளிலிருந்தோ பெறப்பட்டேயிருந்தன. அதனால் அவர்கள் போராட்டத்தை கைவிடவோ அல்லது ஒதுங்கவோ முயலவில்லை.

இன்று ம் இப்பொழுதும் ஈழத்தில் இயக்கங்கள் போராடிக்கொண்டுதான் இருக்கின்றன.

இவர்களை ஏற்றுக்கொள்வதும் விடுவதும் அல்லது கூலிக்குழுக்களாக வர்ணிப்பதுவும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது.

இனவிடுதலைப்போராட்டம் என்பது பலபடிமுறைகளைக்கடந்தும் தன்னைப் புதுக்கியும் செதுக்கியும் முன்னேறும் என்பதை உலக நாடுகளில் நடந்தபோராட்டங்கள் வலியுறுத்துகின்றன.


இதை ஏற்றுக்கொள்ளும் மனத்துணிவின்றி கூலிப்போராட்டம் என்று விபரிப்பது எவ்வாறு கூடும் என்பதை இவர்கள் தான் சொல்ல வேண்டும்.

//ஈழ ஆதரவு பிழைப்புவாதிகளின் விருப்பம் மற்றும் துணையுடன் அத்துமீறி ஆக்கிரமித்த இந்தியா, இதன் மூலம் புலிகளை அவமானப்படுத்தியும் ஈழத் தமிழ்மக்களை படுகொலையும் செய்தனர். இதனால் ராஜீவ் புலிகளால் கொல்லப்பட்டார். இதன் பின் ஈழ ஆதரவு பிழைப்புவாதம் எதிர் நிலைத்தன்மை பெற்றதுடன், புலி எதிர்ப்பு ஆதரவு என்று குறுகி இரண்டு அணிகளாகியது. இங்கு பிழைப்புவாதம் சார்ந்து வெளிப்படையாகவே புலியெதிர்ப்பு, புலியாதரவு என்று தன்னை கன்னை பிரித்துக் கொண்டது. இதற்கூடாக தம் பிழைப்பு வாதத்தை நடத்தத் தொடங்கியது. தமிழ் மக்களை இவை கண்டு கொள்ளவில்லை.//

ஆக "டோலர்கள் " இந்தியாவின் தவறையும் புலிகளின் எதிர் வினையையும் சரி என்று ஒத்துக்கொள்கின்றார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

அப்படியாயின் புலிப்பாஸிஸம் என்று புலம்புவது வெறும் விளம்பரத்திற்குத்தானா?

//இவ்விரண்டும் இந்திய மேலாதிக்கத்தை அடிப்படையாக கொண்டு இயங்கியதுடன், புலியை ஆதரிக்கக் கோரியது அல்லது எதிர்க்கக் கோரியது. இப்படி புலியைச் சுற்றி இயங்கியது, இந்த பிழைப்புவாதம். இது ஈழத் தமிழ் மக்களையிட்டும், அதன் நலனில் இருந்தும், அன்று முதல் இன்று வரை சிந்தித்தது கிடையாது. தன் சொந்த மக்களை ஏமாற்றி பிழைக்கும் இந்தக் கும்பல், அதே போல் ஈழ மக்களையும் நட்டாற்றில் விட்டுத்தான் பிழைத்தது. //

இந்திய மேலாதிக்கத்திற்கு புலிகள் எதிரானவர்கள் என்ற கருதுகோளின் அடிப்படையில் புலிகளை அழிக்க இந்தியா கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் புலியெதிர்ப்பைப்போலவே புலியாதரவும் இந்திய மேலாதிக்கத்தை அடிப்படையாக கொண்டது என்று எவ்வாறு கூறுகின்றீர்கள்?

ஈழத்தமிழ் மக்களின் உயிரிழப்பு மீதான தமிழக மக்களின் அனுதாபத்தை உங்களால் எவ்வாறு இவ்வாறு கொச்சைப்படுத்த முடிகின்றது.


அப்போ புலியை எதிர்க்கும் நீங்களும் பிழைப்பு வாதிகள் தானா?

இது ஈழத் தமிழ் மக்களையிட்டும், அதன் நலனில் இருந்தும், அன்று முதல் இன்று வரை சிந்தித்தது கிடையாது. தன் சொந்த மக்களை ஏமாற்றி பிழைக்கும் இந்தக் கும்பல்

நீங்களுமா?


சரி அவர்களை விட்டு விடுங்கள். நட்டாற்றில் விடப்பட்ட மக்களைக்கரையேற்ற நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்.
புலிப்பாஸிஸம் புலியெதிர்ப்பு என்று எழுதுவதன் மூலம் இந்த மக்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்று கூற வருகின்றீர்கள்.

புலிகளுடன் செலவழிக்கும் நேரத்தை சிங்கள இன ஒடுக்குமுறையயும் அதனால் தமிழ் மக்களின் துயரங்களையும் வெளிக்கொண்டுவரும் பரப்புரைகளையும் நீங்கள் செய்யலாமே? அதுவே ஒரு வகையில் மக்களின் துயரங்களை குறைப்பதற்காவது வழி கோலும் என்று அறியாதிருக்கின்றீர்களா?

பல "இஸங்"கள் பேசும் உங்களால் இவ்வுலகு இருக்கும் இதே ஒழுங்கில் அதனை எதிர்கொள்வதுவும் அதனை நம் மக்களின் போராட்டத்தின் ஆதரவு திசையில் வளைத்துக்கொள்வதுவும் முடியாத விடயமா ..என்ன?

//இன்று புலிகள் தாம் தப்பிப்பிழைக்க, ஈழ மக்கள் கொல்லப்படுவதாக காட்டி நடத்தும் பலி அரசியலை வலிந்து செய்யத் தொடங்கினர். எவ்வளவு மக்கள் பலியாகின்றனரோ, அதுவே தாம் தப்பிப்பிழைக்கும் அரசியல் பிரச்சாரத்துக்க உதவும் என்பது புலி அரசியல். அதற்கு அமைய மக்களை பலியிட்டு வரும் புலிகள், தமக்கு ஆதரவான இந்திய விஸ்தரிப்புவாதிகளின் துணையுடன் ஈழத்து எழுச்சியை தமிழகத்தில் உருவாக்கினர்.//


அப்போ சிங்கள இராணுவத்தின் குண்டுகளால் தமிழ் மக்கள் இறக்கவில்லையா ? புலிகள் பலி பீடத்தில் வைத்து கழுத்தறுக்கின்றார்களா? அது என்ன எப்போதும் காரணங்களைப் புலிகளுக்கு எதிராக உருவாக்குன்ற உங்களால் உண்மைக்காரணங்களை கண்டறியவே முடியாதா?


அப்போ புலிகள் இதுவரை செய்து வந்த போராட்டம் ஈழ மக்களைக்காத்ததா ? அல்லது அழித்ததா?

//எவ்வளவு மக்கள் பலியாகின்றனரோ, அதுவே தாம் தப்பிப்பிழைக்கும் அரசியல் பிரச்சாரத்துக்க உதவும் என்பது புலி அரசியல். //

இது எப்போது தொடக்கம் புலியரசியல் ஆனது. அப்படியென்றால் ஏறக்குறைய 20 வருடங்களாக புலிகளால் பல காலங்களிலும் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் விரும்பியோ விரும்பாமலோ வாழ்ந்த மக்களை பலியிட்டுக்கொண்டா இருந்தார்கள்.

அப்போதெல்லாம் எவ்வகை அரசியலை அவர்கள் நடாத்தினார்கள்? அப்படியொரு அரசியலை நடாத்தியவர்களுடனா சர்வதேசமும் பேச்சு வார்த்தை என்று முண்டியடித்தது?

மக்களின் பிரதிநிதிகளாய் இல்லாமல் ஒரு போராளிக்குழுவாகவா அவர்களுடன் பேச்சு வார்த்தை நடாத்தினார்கள்? அப்படி யானால் வேறு எந்த போராட்டக்குழுக்களை வெளிநாடுகளுக்கு அழைத்து பேச்சு வார்த்தைகள் நடாத்தினார்கள்?

தமிழக அரசியல்வாதிகளை இந்த வாங்கு வாங்கிகின்றீர்களே... நீங்களும் அதே அரசியலைத்தானே செய்து கொண்டிருக்கின்றீர்கள். புலிகள் இல்லையென்றால் உங்களுக்கும் எழுதுவதற்கு விடயம் இல்லாது போய்விடுமே?

கம்யூனிஸம் சோஷலிஸம் தான் எழுதுவோம் என்று அடம் பிடித்தால் வாசிப்பதற்குத்தான் ஆள் இல்லாது போகும். ஏனெனில் இப்போது நம் மக்களுக்குத் தேவை "உயிரிஸம்" அதாவது பாதுகாப்பான வாழ்க்கை.

உயிரிற்கே உத்தரவாதம் இல்லாத போது உங்கள் தத்துவங்களை வைத்து குப்பையா கொட்டுவது.

சரி அதை வைத்து மக்களுக்கான வாழ்வாதாரத்தை வழங்கமுடியுமானால் எது எப்படி என்று எழுதுங்கள் மக்களுக்கு வழிகாட்டுங்கள்.

அது எதுவுமே செய்யாது புலிகளைச் சுரண்டிக்கொண்டிருப்பதும் மூளைக்குள் திணித்துக்கொண்ட குப்பைகளை இடைச்சொருகல் இட்டு மேதமைத்தன்மையைக் காட்டுவதும் தான் உங்கள் போராட்டம் என்றால் பாவம் "டோலர்கள்"

//இந்த இந்தியத் தேர்தலை குறைந்தபட்சம் உண்மையான தமிழின உணர்வாளர்கள் யார் என்பதை, அவர்கள் எடுக்கும் முடிவுகள் தான் இன்று தீர்மானிக்கின்றது//

நீங்கள் எழுதியது தான்.

அப்போ இவர்களை எந்தப்பக்கத்தில் சேர்க்கின்றீர்கள்?

"உண்ம்மையான தமிழுணர்வுள்ளவர்களை " தமிழ் மக்களுக்கு எதிரான மகிந்தவின் சிங்கள பேயரசிற்கோ சேலகட்டிய முசோலினி சோனியாவின் பக்கமோ சேர்ப்பீர்கள் ஆனால் நீங்கள் கல்லெறி வாங்குவது தவிர்க்க முடியாதது.

இவர்களை புலி ஆதரவு/ஈழ ஆதரவுப்பக்கத்தில் சேர்த்தால் புலிகளும் அவர்கள் ஆதரவாளர்களும் சரி என்று ஆகின்றது.

நீங்கள் அவர்களுக்கு எதிராக எழுதுவது தவறென்றாகின்றது. உண்மையான தமிழுணர்வு உங்களுக்கு இல்லையென்றாகின்றது.


//இவர்கள் அமைக்கும் எந்தக் கூட்டும், இந்திய விஸ்தரிப்புவாதத்தின் அரசியல் எல்லைக்குள் ஈழத்தமிழனை ஒடுக்கவே செய்யும். இதற்கு மாறாக இந்தப் போலியான பிழைப்புவாத ஆளும் வர்க்கத்தின் தேர்தலை புறக்கணித்து, புரட்சிகரமான வழியில் தேர்தல் பகிஸ்கரிப்பதை தம் அரசியலாக கொண்டு மக்களுக்காக போராடுவது அவசியம். இதன் மூலம்தான், ஈழ தமிழ் மக்களுக்கு, தமிழக மக்கள் அரசியல் உணர்வுடன் உதவிவிடமுடியும். //


உங்கள் கூட்டும் இவர்களுடனா அல்லது உண்மையான தமிழுணர்வாளர்களுடனா?

புரட்சிகரமான வழியில் - அதைத்தான் என்னவென்று சொலுங்களேன் "டோலர்கள்" எங்களுக்கெல்லாம் உங்களைப்போல் அவ்வளவு விபரம் பத்தாதுங்க.

முடிந்தால் புட்டுப்புட்டு வைங்க ..இல்லாவிட்டால் "பித்த" வாந்தியெடுக்கும் பித்தலாட்டங்களை விட்டு விடுவது "தமிழ்" மக்களை தாங்களாகவே முன்னேற வழிவகுக்கும்.



1 comment:

Anonymous said...

nice article

Post a Comment