Sunday, March 1, 2009

இந்த உயிர் இனி உங்கள் உயிர் - கருணாநிதி

Karunanidhi

நான் 85 ஆண்டுகளுக்கு முன்பு, தஞ்சை த் தரணியில் ஒரு சிற்றூராம், தேவார திருவாசகப் பாடல் பெற்ற திருக்கோளிலி என்று வழங்கப்படும் திருக்குவளையில் ஒரு சாதாரண, சாமான்ய இசைக் குடும்பத்தில் பிறந்து அந்த வட்டாரத்து சீமான்களால் சவுக்கடிபட்டு துடித்துக் கொண்டிருந்த விவசாயப் பாட்டாளி மக்களின் வியர்வையும்- அவர்கள் தம் விழிகள் சிந்தியக் கண்ணீரும்- அந்த சிறு வயதிலேயே என்னைச் செதுக்கி, சிலையாக வடித்து, செங்கொடி அணிவித்து- சிந்தனைச் சிங்கமாம் பெரியாரின் கையிலே ஒப்படைத்தது.

செம்மொழியாம் தமிழின் செல்வர், அண்ணாவின் அரவணைப்புக்கு என்னை ஆளாக்கியது. கோடையிடி அழகிரி அண்ணனின் பாசமழை, பாராட்டு மழையாகி என்னைக் கலைஞன் ஆக்கியது. அண்ணன் ஜீவாவின் மீது கொண்ட பாசம், என் நெஞ்சில் நிறைந்திருந்தது. அவர் மறைந்தும், அது மறையாமல் இருந்தது.

இவற்றையெல்லாம் அசை போட்டுக் கொண்டு தான்- அடுத்து ஒரு பிறவி - இப்போது நான் எடுத்ததாகச் சொல்லப்படும்- அபாயகரமான- அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வந்திருக்கின்றேன்.

என் எண்ணக்கண்ணாடியில் வண்ணப்புதுமையாக ஜொலித்துக்கொண்டிருக்கின்ற கடந்த காலங்களில் சிறகு விரிக்கின்றேன். 'நேரமோ பத்தரை , மாதமோ சித்திரை ,மக்களோ நித்திரை" என்ற அண்ணாவின் தாரக மந்திரத்தை தலையாய கொள்கையாகக் கொண்டு தமிழக மக்களின் நித்திரை கலையாமல் நான் ஆடிய ஆட்டங்களை எண்ணிப்பார்க்கின்றேன்.

ஆங்கிலம் அறிந்த காங்கிரஸ் ஆட்சியைக்கலைக்க தமிழ் என் சவுக்கானது. அன்னை பாடும் தாலாட்டாக என் அன்னைத்தமிழால் உடன் பிறப்புகளின் தூக்கம் கலையாது உணர்வூட்டி வெறியேற்றியது இன்று வரை என்னைக்காப்பதுடன் என் குடும்பத்தை குபேர செல்வத்தில் குளிக்கவும் வைத்திருக்கின்றது.

என் மனம் விரும்பா நிகழ்வேதும் நடக்குங்கால் உணர்வூட்டி ஊதியமில்லா வேட்டை நாய்களான என் கழகக் கண்மணிகளைக் களமிறக்கி எத்தனை காரியங்களைச் சாதித்திருக்கின்றேன். தமிழ்க்கவிஞர்கள் ஏழைகளாய் வாழ்வதே விதி என்ற விதியையே மாற்றிக்காட்டியிருக்கின்றேன். தமிழ் விளையாடும் என் கவிதைகளால் கட்டுரைகளால் காவியத்திரைப்படங்களால் கழகத்தின் தலைமையைக் கைப்பற்றினேன்.

சீனியாரிட்டி போட்டியாக வந்தபோது என் தமிழுக்கு கிடைத்த சீட்டியொலிகளால் அதனை முனை மழுங்கிப்போகச் செய்தேன். வாரிசே இல்லா அண்ணாவின் வாயாலேயே தளபதி என வாய் மொழியச்செய்தேன்.

இன்னலே வாழ்க்கையாகி நிதம் நிதம் செத்துப்பிழைத்த மக்களை வெத்து வேட்டு இந்தி எதிர்ப்பால் உசுப்பேத்தினேன். அதுவே காங்கிரஸின் சாவு மணியாகி கழகத்தை அரியணை ஏத்தியது யார் சாதனை? திராவிடர் நாட்டில் திராவிடர் ஆட்சியை ஏற்றிய என் திறத்தை இன்று சிலர் குற்றம் சொல்வதும் குதர்க்கம் செய்வதும் தான் என்னை வேதனையடையச்செய்கின்றது.

அதனால் என்ன? நயாபைசாவுக்கு வழியில்லாது கடற்கரையோரங்களில் கவிதையெழுதி சினிமாவிற்கு விற்ற நான் இன்று சினிமா உலகத்தையே வாங்கும் சொத்துடன் இருக்கின்றேனே.. இது என் திறமையில்லையா?

கழகத்தைச் சிதைக்கவென்றே கணக்குக் கேட்டவரை விரட்டியடித்ததும் இன்று வரை கழகத்தையே குடும்பச்சொத்தாக்கி வைத்திருப்பதிலும் என் திறமையில்லையா? என் தமிழால் எனையே துவைக்க நினைத்த வைகோவை ஒரே உறையில் இரண்டு கத்திகளிற்கு வேலையில்லை என்று வெட்டி விட்டதில் என் திறமையில்லையா..?

வாக்குறுதிகளை அள்ளி விடுவதும் பின் தேர்தலில் வென்ற பின் அவற்றை மறந்து விடுவதும் மீண்டும் ஒரு ஐந்தாண்டுப் பொழுதில் அதே மக்களைச்சந்தித்து வாக்குப்பெறுவதும் வெற்றிகாண்பதுவும் என் திறமையில்லையா? என் நெஞ்சத் துணிவின் திறனில்லையா?

என் ஆட்சியில் தமிழகம் முன்னேறிக்கொண்டிருக்கின்றது என்பதற்கு என் வருவாய் பெருகிச் செல்வதே முன்னுதாரனம் அல்லவா? வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்னையும் வாழவைக்கின்றதே...

அண்ணாவைப் பின் தொடர்ந்த என்வழியைத் தனி வழியாக்கி கணக்குக்கேட்டோரையும் தூக்கியெறிந்தோரையும் அவ்வழியைப்பின்பற்ற வைத்ததும் செல்வர்கள் ஆக்கியதும் என் திறமையில்லையா?

ஈழத்தமிழரின் இரத்தம் சிந்தியபோதெல்லாம் என் பேனாவும் கண்ணீர் சிந்தி அழுததே. என் கண்மணிளால் உலகத்தமிழ்த் தலைவனாக ஆக்கப்பட்ட என்னை மீறி காரியமாற்றுவதை எவ்வாறு தாங்கிக்கொள்வது. என் தமிழ் நெஞ்சு கொதித்துத் துடிப்பதை என் காவலர்கள் எவ்வாறு பொறுத்துக் கொள்வார்கள்.

தடியெடுத்த காக்கிச்சட்டைக்காரருடன் நீதியை காக்க வேண்டிய கறுப்புச் சட்டைக்காரர்கள் எப்படி மோதலாம்? கம்பெடுப்பது காக்கிச்சட்டைக்காரர் பணி. அவர்களுடன் மோதுவதும் கார் எரிப்பதுவும் நீதிக்கு நேர்ந்த பிணி.

என் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு குலைந்து விட்டது என்பதும் ஆட்சிக்கலைப்பு வேண்டி நீதிமன்றம் நாடிச் செல்வதும் அநாகரீகத்தின் உச்சம். 85 வயதிலும் தள்ளாமையிலும் முதுமையிலும் ஆட்சி நடாத்துவதன் துன்பத்தை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதுதான் எவ்வளவு காயம்பட்டதோ அவ்வளவுக்கு அவ்வளவு காப்பீடாக அரசு பணத்தைதருவதாகச் சொல்லி விட்டேனே.. அதன் பின்னும் பணி மறுப்புச் செய்து போராட்டம் என்று கூவி கொடி பிடிப்பது என்ன நியாயம். எனதருமை அண்ணா இன்றிருந்தால் நான் படும் வேதனை கண்டு கண்ணீர் விட்டுக் கதறியிருப்பார்.

பகுத்தறிவுப்பகலவன் பெரியார் இன்றிருந்தால் பார்ப்பானுக்கு எதிரான போராட்டத்தைக் கைவிட்டு பார்கவுன்ஸிலுக்கு எதிராக போராட்டம் நடத்தியிருப்பார்.

85 வயதிலும் என் ஆட்சியைக்கைவிட முடியாது நானிருக்க 800 வருடங்களாக கோவில் சொத்தை அனுபவித்தவர்கள் போராட்டம் நடாத்துவதில் என்ன தவறு..?
மற வழியில் அன்றி அறவழியில் தானே போராட்டம் நடாத்தினார்கள். வாய்தா மேல் வாய்தா வாங்கும் வழக்கை வைத்துப் பிழைக்கத்தெரியாது வழக்கறிஞர்கள் குண்டர்களாக மாறியதில் பாகிஸ்தானின் சதி இருக்குமோ என்று ஐயமுறுகிறேன்.

சைவ உணவுப்பழக்கமுள்ள சுப்பிர மணிய சுவாமியின் மேல் தக்காளியை அடிக்காது முட்டையை அடித்ததில் இந்துத்துவ குண்டர்களின் சூழ்ச்சி இருக்குமோ என்று எண்ணுகின்றேன்.

இதுவே முட்டையாக இல்லாது நிஜக்குண்டாக இருந்திருந்தால்... ஐயகோ நினைக்கவே நெஞ்சம் பதறுகின்றது. நிஜமாகவே சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை கிளப்பி வீட்டிற்கு அனுப்பியிருப்பார்களே..

இந்தத்தள்ளாத வயதில் என்னைத் துன்பப்படுத்துவதில் இவர்களுக்கு என்ன அப்படியொரு இன்பம். இன்னும் ஒரு பத்தோ பதினைந்தோ வருடங்கள் நான் ஆட்சியில் இருப்பதால் தமிழகம் இதற்கு மேலும் ஒன்றும் கெட்டுக்குட்டிச் சுவராகப் போய்விடாது என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கிழவனை துன்பப்படுத்திய பழிச்சொல்லிலிருந்து உங்களைக்காத்துக் கொள்ளுங்கள்.உற்ற நண்பர்கள்- உடன்பிறப்பனையோர் அத்தனை பேருக்கும் நன்றி கூறியவாறு வாழ்த்துரைத்து- திரும்பி வருகிற நான், மாநிலம் ஆளும் பொறுப்பை ஏற்றிருக்கிற காரணத்தால் இந்த உடல் நிலையிலும் எனக்கு உபத்திரவம் தர வேண்டுமென்று ஊசிகள் கொண்டு என் நெஞ்சில் குத்திக் கொண்டிருப்போரை எண்ணி இவர்களுக்கு உள்ளம் என்று ஒன்று இருக்கிறதா அல்லது அண்ணா அவர்கள் சொன்னது போல, உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு பள்ளம் இருக்கிறதா? என்று ஐயுற்றவாறு இன்றிரவு ராமச்சந்திரா மருத்துவமனையில் எண்ணம் அலை பாய்ந்து கொண்டிருக்கிறது.


டாக்டர்களின் ஆலோசனைகளையும் மீறி இத்தனை வேதனையுடன் என் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்த யார் காரணம்?

என் உயிர்த்தமிழகமே ! கழகக் கண்மணிகளே !

இந்த உயிர் இனி உங்கள் உயிர்... இதை எடுத்துக் கொள்வதும் விட்டு விடுவதும் உங்கள் கையில்த்தான் இருக்கின்றது..

வளர்க தமிழ் ! வாழ்க அண்ணா நாமம் !

No comments:

Post a Comment