
எனக்குள் இந்தக்கேள்வி இப்போது அடிக்கடி தோன்றிக்கொண்டிருக்கின்றது. தொடர்ந்து மூன்றாம் அணியைத் தேடிய புற்றீசல் பதிவுகளைப்பார்க்குந் தோறும் இப்படியான ஒரு நம்பிக்கையை இவர்கள் கொண்டுள்ளார்களோ என்றே எண்ணத் தோன்றுகின்றது.
மனித மேன்மைகளை வெளிக்கொண்டுவருவதற்குப்பதிலாக வலிமையான அடக்கு முறைக்குள் அதனைக் கட்டிப்போட்ட பெருமை மார்க்ஸியத்திற்கு உண்டு. சம உரிமையின் பேரால் மனித நீதியும் ஆசையும் அன்பும் பாசமும் சமூகத்தின் மிகப்பெரிய அடையாளமான குடும்ப வாழ்வும் வரைமுறையற்ற ஒடுக்கு முறக்குள் அடக்கப்பட்டதே இன்று சிதறுண்டு கிடக்கும் சோவியத்தின் வரலாறாக இருக்கின்றது.
1917 இல் பெரு வெளிச்சமாக அடையாளம் காணப்பட்ட சமதர்ம சமுதாயத்தின் எழுச்சி எழுபது வருட கால இடைவெளியில் தன் சாயம் வெளிக்க காலாவதியாகிப்போனது. மனிதர் எப்போதும் தம் சிந்தனையால் ஆளுமையால் செயலால் வலிமையால் ஒருவருக்கொருவர் சமனானவர்கள் அல்ல என்பதே இதன் காரணமாயிருக்கக் கூடும். இப்படிப்பட்டவர்களின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சரிக்கட்டும் முயற்சியுடன் இணைக்கும் கோட்பாடு எப்போதும் வலிமையாய் இருந்து விட முடியாது.
இதையும் மீறிய தாழ்வில் தாழ்ச்சியும் உயர்வில் உயர்ச்சியும் பார்க்கும் மனோபாவத்தை மனித காருண்யத்தை பிரயோகித்து நிவர்த்திக்க முடியும் என்பதே நவீன மனிதவியலின் நீட்சியாயிருக்க வேண்டும்.
இதன் முதற்படியாக மனித இருப்பைக் கேள்விக்குறியாக்க முயலும் பொருள் முதல் வாதத்தின் அகோர எழுச்சியான உலகமயமாக்கலை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். தனி மனித சுரண்டலைத் தாற்பரியமாகக் கொண்டிருக்கும் உலக மயமாக்கலுக்கு நாம் கொடுத்திருக்கும் விலை மிக அதிகமென்றே படுகின்றது.
போரையும் நோயையும் பட்டினிச்சாவையும் துரிதப்படுத்தும் இவ்வுலக ஒழுங்கினைச் சரி செய்யும் வல்லமை காலாவதியாகிப்போன கயூனிஸக் கோட்பாடுகளுக்கு கிடையாது என்பதே உண்மை.
உலகளவில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு சமூக அங்கமாகிப்போன ஈழத்தமிழ் மக்களைப்பொறுத்தளவில் மார்க்ஸிய கம்யூனிஸ முன்னெடுப்புகள் மேலும் ஒரு பாரிய ஒடுக்குமுறைக்கூடான எதிர்ப்புக்கே வழி காட்டும் என்பதை இந்த மூன்றாம் அணியின் மூக்கணாங்கயிற்றைப் பற்றிச் சிந்திப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
புரட்சிகரம் என்ற சொல்லடுக்கில் ஒழிந்து கொள்ளும் உங்கள் வெற்றிடங்களை மீண்டும் மீண்டும் முன்னெடுக்கும் உங்கள் மடமையை உணர்ந்து கொள்ள வேண்டும். புலியெதிர்ப்பு என்ற போர்வையில் உங்கள் இருப்பைத் தக்க வைத்துக்கொள்வது என்பதற்கப்பால் எதுவித அரசியலும் அற்றவர்கள் நீங்கள் என்பதை மக்கள் ஏலவே அறிந்து கொண்டிருக்கின்றார்கள்.
புலியெதிர்ப்பு என்பது ஒருவகை பாஸிஸ மறுப்புப்போராட்டம் என்று கூறிக்கொள்ளும் உங்களது அரசியல் உலகமயமாக்கல் மூலம் உலக மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் பாஸிஸம் பற்றிய தெளிபையும் கொண்டிருக்காது போனதேன்.
உலகமயமாக்கல் மூலம் சிறுபான்மை மக்களின் மொழி இன அடையாளங்கள் காவு கொள்ளப்பட்டுக்கொண்டிருப்பதை புலியெதிர்ப்பு அரசியலை மட்டும் தூக்கிப்பிடிப்பதன் மூலம் எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்று நம்புகின்றீர்கள்.
புலிகளின் மறம் சார்ந்த இருப்பை விட மேலான கொடுமையுடன் இன்று ஈழ மக்களின் இருப்பையும் தனித்தன்மையையும் சிதைக்க முற்படும் சிங்கள இனவாதம், உலக மயமாக்கலின் உதவியூடாக இலங்கையைக்காவு கொள்ளவிழையும் அகன்ற பாரதக்கனவுகள் பற்றியும் அதனை எதிர்கொள்ள ஈழமக்களைத் தயார்ப்படுத்தவும் எப்போதாவது நீங்கள் முயன்றதுண்டா?
புலிகளின் இயல்புகளுடன் ஒத்துப்போகாதவனாயினும் நெருக்கியடிக்கும் சிங்கள இனவாதத்தின் கோரத்தில் இருந்து தமிழ்த்தேசியம் இதுவரை காத்துக் கொள்ளப்பட்டிருப்பது அவர்களாலேயே அன்றி காகிதப் புலிகளாலான உங்களால் அல்ல. தமிழ்த்தேசியத்தின் இருப்புக்குக் காத்திரமான கருத்தியல் உருவாக்கத்தை முன்வைக்காத உங்களைக் காகிதப்புலிகள் என்றழைப்பதில் தவறில்லை என்றே கருதுகின்றேன்.
புலிகளின் தோல்வியை இறைஞ்சி வரவேற்கின்ற உங்கள் வழி பாடுகள் அடுத்து என்ன என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாத அந்தகாரத்தில் சிதம்பிப்போய் நிற்பதை உங்களைப்போலவே நாங்களும் அறிவோம். புலிகளுக்கு எதிரான மாற்றீடுகளைக் கண்டு பிடிக்கும் வரை உங்கள் புலியெதிர்பை உடைப்பில் போடுவதே நீங்கள் ஈழத்துத் தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய நன்மையாகும்.
மாற்றீட்டைக் கண்டு பிடிக்க உங்களைப்போன்றவர்களுக்கு மிக நீண்ட ..நீ..ண்..ட காலம் பிடிக்கக் கூடும். அது வரை வெத்து வேட்டு வேடிக்கைகளை நிகழ்த்தாதிருங்கள். புலிகளின் பாஸிஸத்திற்கும் சிங்கள பேரினவாத பாஸிஸத்திற்கும் இடையிலுள்ள வித்தியாசம் மிகப் பெரிது. அதைப் புரிந்து கொள்ளுங்கள். அது தமிழ்த் தேசியத்தின் இருப்பு.
No comments:
Post a Comment