
கப்டன் "ஸொரோ" பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருபீர்கள் கயிறுகளில் தாவி குதிரைகளில் ஓடி வாள் சுழற்றும் சாகசமும் வாள் நுனியில் "z" கீறப்ப்டும் அதிசயமும் இன்றும் பெரியவர்களையும் குழந்தைகளாக்கி விடும். கொள்ளையடித்த பணத்தை ஏழைகளுக்கு கொடுத்துதவும் காருண்ணியத்தின் மூலம் எங்கள் மனங்களில் நாற்காலி போட்டு உட்காரும் பலம் அந்த காரக்டருக்கு உண்டு.
அது போலவே தமிழ்த்திரையரங்கில் மின்னிய விஜயகாந்தும் தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டார். ஏழைகளைத் துயரப்படுத்தும் வில்லன்களை துவம்சம் செய்யும் போது திரையரங்கு அதிரும் "டும் .... டுஷ்ஷும்" அதிர்வுகளில் நம் கையாலாகாத் தனங்களையும் மீறி நம் கைகளும் முறுக்கெடுத்துக் கொள்ளும்.
எம்மைத் துன்பப்படுத்திய அவமானப்படுத்திய எத்தனை கயவர்களை அச்சந்தர்ப்பங்களில் நாமும் துவைத்து தும்பெடுத்திருப்போம் மானசீகமாக.
ஏழை பங்காளன் சமூக சீர்திருத்தவாதி இந்தியன் தமிழ்க்காவலன் எத்தனை வேடங்கள் ..அப்பாவி இளைஞர்களை அவர் பின்னால் திரட்டிச்சென்றது. கூட்டம் கூடக்கூட ஆசையும் கூடிச்செல்லும் போலும்.
சினிமா புகழ் மேவி அரசியல் அதிகாரமும் தேடிப்போக அவரைத் தூண்டி விட்டது.
அதர்மத்தைத் தட்டிக்கேட்கும் பாங்கும் "தமிழ தமிழ தமிழா... " என்ற பாடல் மூலம் தமிழ் உணர்வாளனான பாங்கும் நூறு ஆயிரமாக தமிழ் இளைஞர்களை அவர் பின்னால் அணிவகுத்துச் செல்லச்செய்தன.
'கப்டன்" என்ற பட்டப்பெயருடன் நெஞ்சுயர்த்தி அவரை முன்னால் செல்லவைத்து ஒரு உண்மையான உணர்வுள்ள கூட்டம் அவர் பின்னால் என்றும்.
அ.தி.மு.க , தி.மு.க விற்கு மாற்றாக என்ற பேனருடன் தே.மு.தி.க களம் இறங்கியது. இப்பெருங் கொள்ளைக்காரருடன் எப்போதுமே கூட்டு இல்லையென்ற பெருங்கோஷத்தை கேட்கும் மன நிலையில் மக்கள் இல்லையென்பதோ அல்லது பெருங் கொள்ளையரின் அரசியலை மாற்றீடு செய்யும் இராஜதந்திரம் தெரியாத தன்மையோ கப்டனால் பிரகாசிக்க முடியவில்லை. காசு கரைந்தது தான் மிச்சம்.
அரசியலை விரும்பிய கப்டனால் வெல்ல முடியாத தேர்தல்களை விரும்ப முடியவில்லை. ஹவுஸ்புல் தியேட்டர்களையே பார்த்துப்பழகியவருக்கு பாதியும் நிறையாத ஓட்டுப்பெட்டிகளைச் சகிக்க முடியவில்லை.
ஆறிய கஞ்சி பழங்கஞ்சியாகி பத்தோடு பதினொன்றாகி கொடியரசியல் செய்ய வேண்டுமோ என்ற தன்னிரக்கமும் பதட்டமும் கப்டனைத் தொற்றிக் கொண்டது.
தேர்தல் அறிவிப்பு வந்ததும் கப்டனை தூங்கவே விடாது அது துரத்திக் கொண்டிருக்கின்றது. இரு பெரும் பெருச்சாளிக்கட்சிகளான அ.தி.மு.க, தி.மு.க வுடன் கூட்டுச் சேர்ந்தால் ம.தி.மு.க , பா.ம.க போல் ஆட்சிக்கனவு அடிபட்டுப்போகும் . அதை விட்டால் கருப்பாகவும் வெள்ளையாகவும் வாங்கியது எல்லாம் கரைந்து போகும்.
கட்சிகள் எல்லாம் கூட்டணியை அறிவித்து தேர்தல் தொகுதிகளையும் பிரித்துக் கொண்டபோதும் இவரால் இன்னும் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.
ஈழத்தமிழ் ஆதரவு கொதித்துக் கொதி நிலையாக இருக்கும் போது காங்கிரசை ஓரங்கட்டும் மும்முரத்தில் தமிழக மக்கள் வேறுபாட்டைத்துறந்து வேள்வியில் இறங்கியிருக்கும் போது கப்டனின் நகர்வு வேறாக இருக்கின்றது.
ஆட்சி மேடை ஏறும் வெற்றுக்கனவில் மிதக்கும் காங்கிரசுடன்
கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைக்கும் முஸ்தீபில் இறங்கியிருப்பதாக அரசல் புரசலாகச் செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.
யாரோ எழுதிய வசனங்களைப்பேசிக்கைதட்டல் வாங்கிய கப்டன் சொந்த டயலாக்கில் சொதப்பத் தொடங்கியிருக்கின்றார்.
தமிழகமே காங்கிரசைப்புறம் தள்ள எழுச்சி கொள்ளும் போது அக்காங்கிரசை ஆட்சியில் ஏற்றிவிட முயலும் கப்டனை "தமிழனாக" ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
"தமிழ் நாட்டில் வெற்றி கொள்ள இந்தியனாய் இருப்பதை விட தமிழனாக இருக்க வேண்டும்" என்ற சின்ன சூத்திரம் கூடத் தெரியாத இவர் "கப்டன் ஸீரோ" தானே.
No comments:
Post a Comment