Wednesday, March 4, 2009

தேர்தல் சூடு -என் பார்வையில்


இந்திய தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கட்சிகள் எல்லாம் அணி சேருவதிலும் மாறுவதிலும் தேடுவதிலும் களேபரப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

தேசியக்கட்சிகள் மத்திய ஆட்சியைக்கைப்பற்றுவது பற்றி யோசித்துக்கொண்டிருக்கையில் மாநிலக்கட்சிகள் மாநிலங்கள் அவையைக் கையகப்படுத்துவது பற்றி வியூகங்கள் வகுக்கின்றன. இவற்றுக்கிடையே உதிரிக்கட்சிகள் அதிக சீட்டுகள் தரக்கூடிய கூட்டணிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன. ஏதோ ஏழைக்கேற்ப எள்ளுருண்டை.

இந்தியாவே குலுங்கிக்கொண்டிருந்தாலும் என் பார்வை தமிழக அரசியலை மட்டும் வலம் வருகின்றது.

அ.தி.மு.க வும் தி.மு.க வும் ப்ழம் தின்று கொட்டை போட்ட கட்சிகள் உள்ளூர் கூட்டணியை ஒழுங்கு படுத்திக்கொண்டிருக்கும் போதே மத்திய மந்திரிசபையிலும் கண்வைத்திருப்பன. மத்திய அரசுடன் ஒத்துப்போவதன் மூலம் முழுமையான ஐந்தாண்டு ஆட்சியைத்தக்க வைக்கும் தந்திரத்தை யும் அறிந்து வைத்திருக்கின்றன.

கடந்து காலங்களில் கலைஞர் ஆட்சி பலமுறை ஆட்சிக்கலைப்பில் நொந்து நூலாகிப்போய் கற்றுக்கொண்ட தந்திரம் இது. ஜெயாவிற்கும் இது ஒரு பிரஸ்டீஜ் பிரச்சினை + தன் மேலுள்ள ஊழல் வழக்குகளை இழுத்தடிக்க மத்திய அரசிற்குக்குக் கொடுக்கும் அழுத்தங்களுக்கும் தேவையாயிருக்கின்றது.

மத்தியில் ஆட்சியமைக்கக்கூடிய வாய்ப்புள்ள கட்சிகளில் பா.ஜ.கவின் மத சார்புள்ள குண்டாஸ்களின் அதிரடி நடவடிக்கைகள் அதிகளவில் சிறுபான்மையினரின் வெறுப்பைச் சம்பாதித்து வைத்திருக்கின்றது. அதன் காரணமாகவே சேலை கட்டிய முசோலினி சோனியாவின் - (வார்த்தை உபயம் ம.தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் )-அது சரி இவரையும் கைது செய்து விட்டார்களா அல்லது இல்லையா?_ காங்கிரஸில் இணைந்து கொள்ள இரண்டு தி.மு.க வும் முயற்சி செய்கின்றன.

தி.மு.க இலங்கைத்தமிழர் விவகாரத்தில் தங்கள் இஷ்டம் போல் -அதுதாங்க இராஜீவ் சோனியா மன்மோகன் மற்றும் உள்ளூர் தங்கபாலு போஸ்டர்களை செருப்பால் அடித்தவர்களையும் உருவப்பொம்மைகளைத் தீயிட்டவர்களையும் வாரி சிறைகளை நிரப்பவில்லை -நடக்கவில்லை என்ற அதிருப்தியில் இருக்கின்றது. இதை நன்கு அறிந்து கொண்ட அ.தி.மு.க ஈழத்தமிழர் என்ற இனமேயில்லை இலங்கைத்தமிழர் என்று அழைக்கவேண்டும் என்ற புதுக்கண்டுபிடிப்புடன் அறிக்கை விட்டது. அது என்னவோ முனை மழுங்கிப்போய் விட்டாலும் அது கிளப்பிய அதிர்வுகள் தமிழ் நாட்டுக்காங்கிரஸை ஈர்த்ததென்னவோ உண்மை.

அதுவே சோனியாவின் காதுகளுக்குப்போக நிலமை சீர் தூக்கிப்பார்க்கப்படுகின்றது. ஜெ சோனியாவை வெளி நாட்டுப்பிரஜை என்று திட்டித்தீர்த்தது சரியான நேரத்தில் மு.க வால் ஞாபகப்படுத்த்ப்பட்டிருக்கின்றது.
கலைஞர் ஆட்சியில் சிறு சிறு சலசலப்பென்றால் ஜெயினால் தலைக்கு வரக்கூடிய கத்தியும் நினைத்துப்பார்க்கப்படுகின்றது.

இந்தத் தேர்தலில் ஈழப்பிரச்சினை பெரும் தாக்கத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஈழப்பிரச்சினையில் ஒன்று சேர்ந்த கட்சிகள் வெவ்வேறு அணிகளில் இருப்பது ஒரு பின்னடைவாகும். ஈழப்பிரச்சினையைப்போலவும் காங்கிரஸ் மீதிருக்கும் தமிழக மக்களின் அதீத வெறுப்பும் இம்முறை வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கப்போகின்றது.

காங்கிரசைக் கருவறுக்கும் ஆசை உள்ளூர இருந்தாலும் ஓட்டு வங்கியைக் குறிவைக்கும் கட்சிகளின் ஆசையால் இவை எதுவுமே சாத்தியமாகாதும் போகக்கூடும்.

வை கோ ஜெயாவுடன் ஒட்டியிருப்பதே பாதுகாப்பு என்ற மனவோட்டத்தில் இருக்கின்றார். பா.ம.க வும் திருமாவும் கழுதை கெட்டால் குட்டிச் சுவர் என்று
தி. மு.க தங்களை அழைக்காதா என்ற எண்ணவோட்டத்தில் இருப்பதாகத் தெரிகின்றது.

விஜய காந்த் வாய்ச்சவடால்கள் பலிக்காது போய்விட கஜானாவும் காலியாக தனித்துப்போட்டியென்ற மாஜையில் இருந்து இறங்கி வருவதாகத் தெரிகின்றது. யாருடன் இணைந்து போட்டி என்பதற்கும் முன்னால் இணைவா? தனித்தா ? என்பதில் கூட முடிவெடுக்கத் திணறுபவருடன் இணைந்து கொள்ள கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன.

தமிழக காங்கிரஸில் உதிரிகளாகப் பல கோஷ்டிகள் இருந்தாலும் எதைக்காட்டினாரோ என்ன செய்தாரோ தங்க பாலுவின் கை ஓங்கியிருக்குக்கின்றது. சே .க. முசோலினி தங்கபாலுவையே பெரிதும் நம்புகின்றார். அ.தி.மு.க வுடன் சேருவதை உள்ளிருக்கும் சில ர் விரும்பவில்லை என்று தெரிகின்றது. "அந்தம்மா" "இந்தம்மா" என்று எத்தனை அம்மாக்களுக்குப் பயப்படுவது என்பதுவும் பழைய கசப்புகளும் அவர்களை விரட்டுகின்றது.

இதற்கிடையில் ஈழப்போராட்டம் சார்பிலான எழுச்சி புதிய புதிய எதிர்பார்ப்புக்களை மக்கள் மனதில் உருவாக்கியிருக்கின்றது. சீமானைத் தலைவராக்குவோம் என்றும் ஒரு கோஷம் எழுப்பப்படுகின்றது. ஈழ ஆதரவு என்பதும் கட்சி அரசியல் என்பதுவும் வேறு வேறானவை என்பதை இவர்கள் புரிந்து கொள்கின்றார்களில்லை.

தமிழக மக்கள் நலவாழ்விற்கு சீமானால் என்ன செய்து விட முடியும்? அவரின் கொள்கை என்ன? தனி மனிதரால் என்ன மாற்றத்தைக்கொண்டுவரமுடியும். சிறைக்கும் வீட்டிற்கும் மாறிக்கொண்டிருக்கும் இவரால் தேர்தல் பிரச்சாரங்களை செய்ய முடியுமா? அதற்கும் முன்னால் அவரின் விருப்பங்கள் தான் என்ன? என்ற கேள்விகளுக்கு விடைகள் தெரிய வேண்டும்.

தேர்தலுக்கு மிகக் குறுகிய காலமே இருக்கும் இவ்வேளையில் ஒரு கட்சியை அமைப்பதும் தேர்தலை எதிர்கொள்வதும் சிரமமான காரியங்களே. இவற்றையெல்லாம் தீர்மானிக்காத ஆர்வக்கோளாறுகள் பயனளிக்கப்போவதில்லை.

ஈழத்தமிழர் சார்பாக எழுந்த பேரெழுச்சியைக்கூட இவர்களால் வழி நடாத்தவோ ஒன்று சேர்க்கவோ முடியவில்லை என்பதுவும் கட்சி அரசியலுக்கு அப்பால் யோசிக்கும் திறன் எந்த அரசியல்வாதிக்கும் இல்லை என்பதுவும் வழமை போல ஒரு சாதாரணத் தேர்தலாகவே இது அமையப்போகின்றது.

No comments:

Post a Comment