Sunday, March 8, 2009

ஞாயிறு சங்கல்பம்


ஞாயிறு ஓய்வு நாளும் அதுவுமா செய்வதற்கு ஒன்றும் இல்லாது விட்டத்தைப் பார்த்துக்கொண்டு உட்கார்த்திருந்தேன்.

"உள்ளே வரலாமா ?" அசரீரி கேட்டு திரும்பிப்பார்த்தேன். நண்பன் நின்றிருந்தான். இரண்டு வீடு தள்ளிக்குடியிருப்பவன். நினைத்தபோது ஒரு எட்டு எட்டிப்பார்த்துவிட்டுப் போவான்.

"வரவேண்டாம் என்றால் போய்விடவா போறாய்... சரி சரி உள்ளே வா" என்று அழைத்தேன்.

வந்தவன் உட்காரமுன்னர் ஒரு குண்டை அள்ளிப்போட்டான்.

"டோலர்' கள் இப்போல்லாம் பிழைப்பு வாதம் புலிப்பாசிசம்னு எல்லாம் இப்போ எழுதிறதில்லையாம் ... தினமணியில செய்தி போட்டிருக்கான் "

காலையிலயே ஒன்லைன் பேப்பர்லாம் பிரிச்சு மேஞ்சிடுற என் கிட்டேயா?

ஆனாலும் குறுக்கு மூளைக்காரன். நான் தான் "களவாணி"ன்னு குத்து மதிப்பா கண்டுபிடிச்சிருக்கிறவன்.

"அப்பிடியா எந்த ஊர் தினமணியில நீ பார்த்தாய்? "

சிரித்துவிட்டு வேற டாபிக்கிற்குத் தாவினான்.

"இந்தியாவே தேர்தல் ஜூரத்தில நடுங்கிட்டிருக்கு "
"ஆமா"
"தமிழ்நாட்டில ஆவது ஏதாவது செய்யணும்டா.."
"என்ன புரட்சிகரமான வழியிலயா?"

என் குறும்பை புரிந்து கொண்டவன்

"அப்படியில்லடா .. ஈழத்தமிழர் பிரச்சினைல பொங்கியிருக்கிற ஜனங்களை அப்பிடியே டைவேட் பண்ணி தமிழ்நாட்டில ஏதாவது மாத்தம் கொண்டருணும்டா"

அவனை ஏற இறங்கப்பார்த்து விட்டு

"என்னடா தனித் தமிழ் நாடு போராட்டம் தொடங்கிடலாமா? "

"ஒரு ஈழம் போதாதா ? சாகும் வரை நம்மை நிம்மதியில்லாம கொன்னுபோட.. இது வேறைடா"

என்ன என்பதைப்போல அவனைப்பார்த்தேன்.

"இதே தமிழ் உணர்வுள்ளவங்களை ஒவ்வொரு தொகுதியிலயும் சுயேச்சயா நிப்பாட்டணும் ... இப்போ இருக்கிற ஈழ ஆதரவுப் பேரவை கிளர்ந்தெழுந்திருக்கிற மாணவர்கள் லாயர்கள் சினிமாபேர்வழிங்கள்ன்னு எல்லாரையும் இவங்களுக்கு ஆதரவாப் பேச வைக்கணும். "

"பேசவைச்சிட்டா மட்டும் ...."

என்னை இடைமறித்துதொடர்ந்தான்.

"பேசமட்டும் வைப்போம் அப்ப மக்கள் என்ன நெனைக்கிராங்கன்னு தெரிஞ்சிடும் ..... அதுமட்டுமில்ல மக்கள் மாறனும் மாறனும்னு சொல்லிக்கிட்டிருக்கிறோம்ல ..அவங்களுக்கும் ஒரு சான்ஸ் கொடுக்கணும்லே... "

அவன் யோசனை கிறுக்குத்தனம்னு பட்டாலும் அதில இருந்த ஞாயம் சரியாகவே பட்டது.

"சரி ஒரு கதைக்கு இதெல்லாம் சாத்தியம்னு வைச்சுக்கிட்டு இவங்க எல்லாத்தையும் ஜனங்க வெற்றி பெற வைச்சாலும் .. அதுக்கப்புறம் என்னா? "

என் கேள்வியைப் புரிஞ்சு கொண்டானோ என்னவோ .. எனக்கு மட்டும் புரிஞ்சா கேள்வி கேட்டேன். ஏதோ கேக்கணும்னு கேட்டு வைச்சேன்.

" வெற்றி தோல்வி இல்ல இங்க முக்கியம் ...தன்னிஷ்டப்படி ஊரை அடிச்சு உலையில போடுற ஒவ்வொரு அரசியல் வாதிக்கும் பயம் வரணும்...

ஜனங்க கோபப்பட்டா நாமல்லாம் நெலைச்சிருக்கவே முடியாதுன்னு... அது மட்டுமில்ல கொஞ்சமாவது ஜனங்களுக்கு நல்லது செய்யவேனும்னு நெனைப்பிருக்கும்... "

சொல்லிவிட்டுச் சிரித்தான். என் யோசனையைப்பார்த்து விட்டுக்கேட்டான்.

"என்னடா யோசனை..'
"ஒண்ணுமில்ல உனக்கு ஐடியா அரசன்னு பட்டம் கொடுக்கலாமான்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்..."

"அப்பிடியா.. இதையும் கேட்டிட்டு அப்புறம் சொல்லுடா... இது கூட முடியல்லன்னா பரவாயில்லை அட்லீஸ்ட் ஒவ்வொரு கட்சித் தலைவருங்க கேக்கிர தொகுதியில் எல்லாம் நம்மாளுங்களை நிறுத்தி அவங்களையெல்லாம் தோக்க வைக்கணும்... அப்படீன்னா தலைவருங்க எல்லாம் அரண்டு போயிடுவாங்கடா..இதையொரு சங்கல்பமாய் எடுத்துக்கணும்டா"

சொல்லி விட்டு என்னைப்பார்த்தான். அவர்கள் அரண்டு போகிறார்களோ இல்லையோ நான் அரண்டு போனேன்.

No comments:

Post a Comment