Saturday, February 28, 2009

தமிழ்க்களவாணிகள்




தமிழீழத்தில் பெருகி ஓடும் இரத்த ஆற்றிலும் கொட்டிக்கிடக்கும் நிணங்களிலும் தசைகளிலும் "அரசியல்" செய்யும் களவாணித்தனம் இன்று தமிழ் நாட்டில் மிகுந்து காணப்படுகின்றது.

உண்மையாகவே பொங்கிக் கொதிநிலையடைந்திருந்த ஈழத்தமிழர் மீதான தமிழக மக்கள் ஆதரவை தங்கள் தேவைகள் நிறைவேற்றத்திற்காக வேண்டியே தூண்டிவிடுவதும் நீர்த்துப்போகச் செய்வதும் நடந்துகொண்டிருக்கின்றது. தங்கள் ஆட்சி அதிகாரம் பதவி என்பவற்றையே எல்லைக்கோடுகளாக வைத்து தமிழகக் கட்சிகளும் தலைவர்களும் இக்களவாணித்தனத்தில் மக்களின் முனைப்புகளை மழுங்கடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தங்கள் அரசியல் நலனென்ற சித்து விளையாட்டிற்கும் அப்பால் களங்களை விரித்துச் செல்ல மறுதலிக்கின்றார்கள். ஆளும் தி.மு.க ஆகட்டும் எதிரணி அ.தி.மு.க ஆகட்டும் மத்திய அரசின் கிளைத்தமிழ்க்காங்கிரஸ் ஆகட்டும் மற்றும் உதிரிக்கட்சிகளான ம.தி.மு.க...பா.ம.க நடிகர்களின் கட்சிகளாகட்டும் தமிழினப்பாதுகாப்புக் கட்சிகளாகட்டும் எல்லோரின் எதிர்பார்ப்பும் தமிழக மக்களின் வாக்கு வங்கிகளின் மீதான காதலே தவிர சாகும் மக்களின் வேதனையைப்போக்கும் மனச்சுத்தியுடனான செயல்பாடு இல்லை என்பதே உண்மை.

தமிழகக் கட்சிகளை விமரிசனம் செய்வதற்கான தார்மீகப் பலத்தை தந்தது அவர்கள் போடும் ஈழத்தமிழ் ஆதரவுக்கோஷமும் வாக்கு வங்கி அரசியலைக்கடந்துபோகா அவர்களின் இரட்டை நிலை நடிப்பும் தான். மற்றவர் அரசியலைக்குறை சொல்வதும் ராஜினாமாவைக்கோருவதும் உரத்துச் சத்தமிடுவதும் தமது தவறுகளை மூடி மறைக்கவும் தங்கள் பலவீனங்களைப் பலங்களாகக் காண்பிக்கவும் மட்டுமேயன்றி நேர்மையான செயற்பாடுகளினால் அல்ல.

புலியெதிர்ப்பு என்ற போர்வையில் சில கட்சிகள் மக்கள் கொலைகளை நியாயப்படுத்துவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமென்றால் இந்தியத் தேசியம் பேசி ஒரு மக்களின் இறப்பைக் கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தி விடுவது அதை விட அயோக்கியத்தனம் என்பேன்.

இவ்வகையான இரட்டை வேட அரசியலே இன்று கொலைகளுக்குள் செத்துச் செத்து வாழும் மக்களை அழிக்க இராணுவ உபகரணங்களை மேலும் மேலும் கொடுக்கும் துணிச்சலை இந்திய காங்கிரஸ் அரசிற்கு கொடுத்திருக்கின்றது.

தன்னிச்சையாகத் துடித்தெழும் தமிழக மக்களின் உணர்வுகளையும் அரசியல் சாயம் பூசி கட்சி உணர்வாகக் கூறு போடுவதைத் தவிர இவை என்ன சாதித்து விட்டன.

அன்று நடந்த தமிழக மக்களின் போராட்டத்தினதும் எழுச்சியினதும் உணர்வலைகள் உணவுப்பார்சல்கள் என்ற அளவில் தன்னும் இந்திய மத்திய அரசை உதவிகளை செய்யத்தூண்டியது. ஆனால் இன்றோ... உலுத்துப்போன அரசியல் கபடம் தமிழன் நெஞ்சில் ஓங்கி மிதிக்கும் வக்கிரத்தை மத்திய அரசிற்குக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

இத்தனை கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை மீறி ஒரு மத்திய அரசு மு்டிவெடுக்கின்றது என்றால் அதற்கு வழி வகை செய்தது யார் தவறு?

செத்து மடியும் ஈழத் தமிழ் மக்களுக்கு இதற்கு மேலும் என்ன நன்மையை நீங்கள் செய்து விடப்போகின்றீர்கள்?

வழிகாட்ட வக்கில்லாத் தலைவர்களைக் கொண்டுள்ளோம் என்ற வேதனையில் தமிழகத்தில் எரிந்து விழும் முத்துக்குமரன்களின் சாம்பல்மேடுகளை என்ன செய்து விடப்போகின்றீர்கள்?

தமிழின உணர்வு கட்சிகளையும் தாண்டியது என்பதைப்புரிந்து கொண்டு மக்களை எப்போது கட்டவிழ்த்து விடப்போகின்றீர்கள்?

மூவேந்தரின் இராஜியத்தில் கட்டுண்டு சாதனைகள் படைத்த தமிழினத்தை நரம்பில்லா நாவேந்தரின் கூட்டுச் சதியில் முடக்கி அழிப்பது எந்த விதத்தில் நியாயமானது.

பொங்குகின்ற தமிழினத்தின் புது வெள்ளத்தை புனலில் பிடிக்கும் முட்டாள்தனத்தைக் கைவிடுங்கள். கட்டவிழ்க்கும் காட்டாற்று வெள்ளத்தை மறைக்கும் அணைகளாக அன்றி முடிந்தால் காப்பாற்றும் கரைகளாக இருங்கள் என்பதே இந்த தமிழ்க்களவாணிகள் முன்னால் வைக்கப்படும் தமிழக மக்களின் கோரிக்கை ஆகும்.

No comments:

Post a Comment