Saturday, February 28, 2009

புலிகளும் எலிகளும்


தமிழின அழிப்பினைச் சிங்களப்பேரினவாதம் மூர்க்கமாகக் கைக்கொண்டிருக்கும் இவ்வேளையில் புலம் பெயர்தேசத்து தேசாந்திரிகளிடம் பெரும் சலசலப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

புலிகளின் இறுதி எட்டிவிட்டது போன்றும் அல்லது அவ்வாறு எட்டுவதற்கு முன்னால் அவர்கள் செய்யவேண்டியன செய்யக்கூடாதன என்பவை பற்றியெல்லாம் அனல்பறக்க இத்தேசாந்திரிகள் தங்கள் வலைத்தளங்களில் எழுதித்தள்ளுகின்றார்கள்.

இத்தேசாந்திரிகளின் தராதரம் என்ன ?அரசியல் பின்னணி என்ன ? என்பது போன்ற பல விமர்சனங்கள் எழுகின்றபோதும் அவற்றைப்புறந்தள்ளி அவர்கள் வைக்கின்ற விமர்சனங்கள் தீர்வுகள் பற்றி முதலில்ப்பார்ப்போம்.

இதன் காரணமாகவே புலிகளினதும் அவர்கள் ஆதரவாளர்களினதும் சர்வதேச நடைமுறைகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாததே.

இது இவ்வாறிருக்க ,

இத்தேசாந்திரிகள் புலிகளின் சரணடைதல் நிபந்தனையுடன் கூடியதானதாக இருந்தால் எவ்வாறு இருக்கவேண்டும் அல்லது நிபந்தனையற்றதாக இருந்தால் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தரம் பிரிக்கின்றார்கள்.

இவர்களின் நிபந்தனை வன்னியில் புலிகளால் "தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களை" மையப்படுத்தியதாகவே இருக்கின்றது. சிங்கள ஆக்கிரமிப்புப் படையால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் இதேயளவான அல்லது இதற்கும் மேலான துன்பத்திலும் துயரத்திலும் கைதுகளுக்கும் படுகொலைகளுக்கும் ம்த்தியிலும் வாழும் மக்கள் பற்றி இவர்கள் அக்கறைப்படவே இல்லை.

மக்கள் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற முடிவிற்கு இவர்கள் எவ்வாறு வந்தார்கள் என்பது ஒரு புறமிருக்க மக்களின் ஆதரவுப் பலமில்லாது புலிகளால் இத்தனை காலமும் எவ்வாறு விடுவிக்கப்பட்ட (புலிகளால்) பிரதேசத்தில் ஆட்சி செய்ய முடிந்தது என்ற கேள்விக்கும் இவர்கள் தான் பதில் கூறவேண்டும்.

இந்திய அமைதிப்படைக்காலத்தில் மக்கள் பலத்தை வென்றெடுக்க முடியாது போனதன் காரணத்தாலேயே கப்பலேறிப்போன "டம்மி" தமிழ் அரசாங்கத்தையும் நாம் பார்த்திருக்கின்றோம்.

இவர்களின் மக்கள் மீதான இத்திடீர் கரிசனை இந்திய ஆளும் வர்க்கத்தின் குரலாக ஒலிக்கின்றதோ என்ற சந்தேகத்தையும் தோற்றுவிக்கின்றது. "புலிகள் ஆயுதங்களைப்போட்டு விட்டு சரணடையவேண்டும்.மக்களைப்பாதுகாப்பாக வெளியேற்றத்தயாராக இருக்கின்றோம்" என்பது இப்போது இந்திய ஆளும் வர்க்க அரசியல் மேடையில் ஒலித்துக்கொண்டிருக்கும் சில வசனங்கள் ஆகும்.

இன்றைய வன்னிப்போரை தம் அரசியல் பொருளாதார நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு நடாத்திக்கொண்டிருக்கும் இந்திய ஆளும் வர்க்கம் திடீரென்று சமாதான தேவதை வேஷம் போடுவது சுத்த கபடத்தனம். இக்கபடத்தனத்தில் நமது புலம் பெயர் தேசத்து தேசாந்திரிகளும் சிக்கிக்கொண்டார்களோ என்றே எண்ணத்தோன்றுகின்றது.

இவர்கள் கூறுவதைப்போலவே புலிகள் நிபந்தனையுடன் அல்லது நிபந்தனையில்லாது சரணடைந்து விட்டால் அடுத்தது என்ன..? இக்கேள்விக்கான பதில் இவர்களுக்கே இது வரை தெரிந்திருக்கவில்லை.

சரி இவர்கள் கூறுவதைப்போலவே மக்களை அழிக்கும் இவ் யுத்தத்தில் புலிகளைப்போலவே ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சிங்கள பேரினவாத அரசிற்கு இவர்கள் வைக்கும் நிபந்தனை என்ன? அல்லது சிங்கள அரசினால் இவர்கள் பெற்ற உத்தரவாதங்கள் தான் என்ன?

ஆயுதப்போராட்டத்திற்கு தமிழ் மக்களைக்கொண்டு வந்த அரசியல் அனுபவக்காரணங்களை நாம் அனைவரும் அறிவோம். அஹிம்சைப்போராட்டத்தில் ஈடுபட்டு ( 1948 இல் இருந்து) தோல்வியடைந்த அரசியல் பாராளுமன்றக் கட்சி அரசியல்வாதிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் தனித்தமிழீழமும் ஆயுதப்போராட்டமும். இதில் புலிகளின் ஆசைகளோ முடிவுகளோ அல்லது தவறுகளோ எங்கும் கிடையாது. தொடர்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற காலத்தின் கரங்களாகத் தான் அவர்கள் இருந்தார்கள்.

இன்று புலம்பெயர் தேசத்தில் "சொரியலாக" தேசாந்திரிகளாக இயங்கும் நீங்கள் கூட தனித்தமிழீழத்தையும் ஆயுதப்போராட்டத்தையும் ஏற்றுக்கொண்டு இயக்கங்களில்ப்போராடியவர்களாக இருக்கக்கூடும். புலிகளை வெறுப்பதற்கு சகோதரப் படுகொலைகளை முதன்மைக் காரணிகளாகத் தூக்கிப்பிடிக்கும் நீங்கள் உங்கள் இயக்கங்களில் இடம் பெற்ற உட்படுகொலைகளை ஏன் நினைத்துப்பார்ப்பதில்லை.

தமிழ் மக்களைப்பொறுத்தளவில் நீங்களும் புலிகளைப்போலவே இரத்தம் படிந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்களே. நீங்கள் ஒன்றும் அவர்களை விட மேன்மையானவர்களும் அல்ல அதேபோல அவர்களைவிடவும் தாழ்ந்து போனவர்களும் அல்ல.

உங்களுக்கு நீங்களே "தூய்மை" வேஷம் போடுவதை விட்டுவிட்டு தமிழ் மக்களின் அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதைப் பற்றிப் பேசுங்கள். புலிகள் தங்களை சுயவிமர்சனம் செய்யவேண்டியதை வலியுறுத்தும் நீங்களும் உங்களைச் சுயவிமர்சனம் செய்து கொள்ளுங்கள்.

அற்ப சுயலாபங்களுக்காக சிங்கள ஏகாதிபத்தியத்தின் காலடியை நக்கி தமிழ் மக்களுக்கு வரலாற்றுத் துரோகம் செய்யும் உங்கள் நண்பர்களை விமரிசனம் செய்யுங்கள். தமிழினத்தின் எழுச்சியை நசுக்க நினைக்கும் ஏகாதிபத்தியங்களின் விபரீத ஆசைக்கு நீங்களும் துணைபோகாதீர்கள்.

புலிகளின் பாசிசம் பற்றியே எப்போதும் புலம்பும் நீங்கள் உங்கள் போராட்ட நடைமுறையும் வழிகளும் எவ்வாறு ஏன் தோற்றுப்போனது என்பதை எப்போதாவது நினைத்துப்பார்த்ததுண்டா? உங்களுக்கு இருக்கக் கூடிய பொறுப்பை மறைத்து புலிகளின் பாசிசம் என்ற ஒற்றைச் சொல்லால் மறுதலீப்பீர்களேயானால் உங்களையும் ஒரு காலத்தில் பாதுகாத்து அரவணைத்த தமிழ் மக்களிடம் இருந்து மீண்டும் மீண்டும் அன்னியப்பட்டுப்போகின்றீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

மக்கள் இல்லாப்போராட்டம் மண்ணுக்குச் சமம் என்று நீங்கள் கூறும் கூற்றுக்கு நீங்களே உதாரணம் ஆகாதீர்கள். அதே போல புலிகளின் பினாமிகள் என்ற போர்வையில் புலம் பெயர் தேசங்களில் துன்பப்பட்ட மக்களை மேலும் துயரப்படுத்தியவர்களும் சர்வதேசத்தின் அனுதாபத்தையும் ஆதரவையும் வென்றெடுக்க வேண்டிய தார்மீகப்பொறுப்புகளை கொச்சைப்படுத்தி தமீழப்போராட்டம் இன்று பயங்கரவாதமாகச் சித்தரிக்கப்படுவதற்கு வழி வகுத்தவர்களும் தங்களைத் திருத்திக்கொள்ளும் நேரம் இதுவே.

புலியெதிர்ப்பு புலியாதரவு என்பதற்குமப்பால் தமிழ் மக்களின் நலன் சம்பந்தப்பட்டிருக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள்.

No comments:

Post a Comment