
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற புஷ்ஷின் பொய் முகம் இன்று உலகெங்கும் வன்முறைகளைக்கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது. ஏகாதிபத்திய எதேச்சாதிகார வன்கொடுமைகளை உலக மக்களின் இரத்தங்களால் எழுதிச் செல்கின்றது. ஆப்கானிஸ்தான் ஈராக் என்று எடுத்துச்செல்லப்பட்ட யுத்தம் இன்று தடம் மாறி அடக்கு முறை அரசுகளின் கைகளில் இன மொழிக் குழும மக்களின் விடுதலை வேட்கையை அடக்கும் மந்திரக் கோலாக நிறம் மாறியிருப்பதே மனித விழுமியங்களைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
ஈராக் தொடர்பான அமெரிக்க அரசின் அணுகு முறை அதன் இருப்பை மையப்படுத்திய அரசியல் என்பதும் பெற்றோல் வணிகத்திற்கும் பச்சை டாலர் பரிவர்த்தனைக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளின் தொகுப்பு என்பதுவும் விசயமறிந்தவர்கள் தெரிந்து கொண்டது தான்.
ஆனால் அதனை தன் கையகப்படுத்த அமெரிக்கா எடுத்துக்கொண்ட ஆயுதம் தான் இன்று மனித நாகரீகத்தின் பெருமையையே எள்ளிக் கேலி செய்து நகையாடிக்கொண்டிருக்கின்றது.
அமெரிக்காவினதும் அதன் அரசியலையும் கடந்தும் இந்து சமுத்திரத்தின் ஒரு ஓரத்தில் ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் உயிர் நாடியைக் குதறிப்போடுவதை யாரால்தான் ஏற்றுக்கொள்ள முடியும்.
பெரியண்ணன் தவறிவிட்ட ஒரு கணத்தில் வனாந்திரத்தில் நரமாமிச வேட்கையுடன் திரிந்து கொண்டிருந்த ஓநாய்களும் கழுகுகளும் நரிகளும் நல்வேசம் போட்டுக்கொண்டதும் அதைக்கண்டும் காணாது விட்ட அமெரிக்க அரசும் பொய் வேடம் போட்ட புஷ்ஷுமே தார்மீகப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இன்று பயங்கர வாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் தமிழ் மக்களைக் குதறிக்கொண்டிருக்கும் சிங்களமும் நாட்டாமை கனவில் வேஷம் போடும் இந்தியாவும் பயங்கர வாதத்திற்கு எதிரான முகமூடி போட்டுக் கொண்டு பயங்கரவாதத்தில் ஊறிக்கொண்டிருப்பதற்கும் அப்பாவிமக்களின் இரத்தம் குடித்துக் கொண்டிருப்பதற்கும் அமெரிக்காவே தக்க பதில் கூறவேண்டும்.
காஷ்மீர் இமாச்சல் பிரதேசம் நாகாலாந்து என்று தன் சொந்த மக்களையே பயங்கரவாதிகளாகப் பாவித்து கொன்று குவிக்கும் இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிரான பங்காளி. இதே போன்றே அன்றைய புஷ்ஷின் ஆட்சியில் பயங்கரவாதத்திற்கு ஆதரவான பாகிஷ்தான் இன்று ஒபாமாவின் பார்வையில் பயங்கரவாதத்தை விதைக்கும் அச்சாணி நாடு. இதே போல நாளை இந்தியாவும் சிங்களச் சிறீலங்காவும் கூண்டிலேறும் நாள் வராமல் போகாது.
இன்று வன்னியில் ஓடும் இரத்த ஆறு ஒன்றும் வீணாகிப்போக மாட்டாது. புஷ்ஷின் எண்ணை வளத்தை அள்ளிக்கொள்ளும் ஆசை ஈராக்கில் மட்டுமின்றி உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் இரத்தச்சேற்றை அள்ளித் தெறித்ததால் இன்று உலகம் துயரத்தில் மூழ்கிப்போயிருக்கின்றது.
கொடுங்கோலர்களின் ஆட்சிகள் என்றும் நிலைத்திருந்ததற்கான வரலாறு சரித்திரத்தில் இடம் பெற்றதேயில்லை.
மாபெரும் கிரேக்க ரோமானிய சாம்ராஜ்யங்களும் உலகை ஆள வெளிக்கிட்ட ஹிற்லரும் இன்று போன இடம் தெரியவில்லை என்பதே உண்மை.
அமெரிக்க மக்களின் மனச்சாட்சியும் ஆளும் வர்க்கத்தின் ஞானக்கன்ணும் விழித்துக் கொள்ளாவிட்டால் அமெரிக்காவும் அவ்வாறே ஆகும். அமெரிக்காவே அவ்வாறு ஆகும் போது அள்ளித்தெளித்த அவசரக்கோலத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்தியா எம்மாத்திரம். இந்தியா என்பது ஒரு நாடல்ல என்பதே சரித்திரம். பல நாடுகளை இராணுவப்பலத்தால் கட்டிப்போட்ட ஒரு அமைப்பு என்பது மட்டுமே உண்மை. தமிழகமே மூன்று பேரரசுகளுடனும் பல சிற்றரசுகளுடனும் ஆளப்பட்டு வந்த பூமி. அதுதான் அம்மண்ணின் நீண்ட கால சரித்திரமும்.
மக்களை அதிகாரமும் இராணுவ பலமும் நிரந்தரமாக இணைத்து வைத்ததாகச் சரித்திரமே இருந்ததில்லை. அதற்கு சிதறிப்போன சோவியத் யூனியனே உதாரணம்.
ரெக்ஸாஸின் கெளபோயின் குதிரை விளையாட்டுகள் இன்று உலக ஒழுங்கில் புதிய மாற்றத்தை வேண்டி நிற்கின்றன.
அகன்ற சோவியத் சோஷலிசக்குடியரசின் ஒழுங்கீனத்தை ஒழுங்கு படுத்த ஒரு மிகைல் கோர்பச்சோவ்வும் ஒரு பெரிஸ்திரோய்க்காவும் தேவைப்பட்டது போல அமெரிக்காவின் இரத்தம் குடிக்கும் நடை முறைகளையும் அதற்கான போர் முகத்தை திருத்தி எடுக்கவும் ஒரு ஒபாமா தேவைப் பட்டிருக்கலாம். எதையும் விடாது எழுதிச் செல்லும் விதியின் வலிய கரங்கள் இதையும் எழுதிச் செல்லும்.
அவ்வாறு நிகழும் ஒரு பொழுதில் இன்று வன்னிக்காடுகள் குடித்துச் செழிக்கும் இரத்தமும் வேர்களால் உறிஞ்சிச் சுவைக்கும் மனித நிணமும் குண்டுகள் விதைத்த தனி மனித ஆணவங்களையும் கானல் நீராகும் வல்லரசுக்கனவுகளையும் கால்களில்ப் போட்டுக் கேள்விகள் கேட்கும்.
மனிதம் வாழ்ந்ததுவும் வாழ்வதுவும் நிலையானது என்றால் மனித வாழ்வுக்கு ஒவ்வாததுவும் எதிரானவையும் எப்போதும் தூக்கி எறியப்பட்டே வந்திருக்கின்றன என்பதுவே இயற்கையின் நிலைப்பாடாகும்.
இவை நீங்கள் நம்பும் மெய்ஞானத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் அகப்படாது விட்டாலும் அதுவே இயற்கையின் நியதி.
எனவே போராடும் தமிழ் மக்களே ! பயங்காட்டும் படங்களை கருத்தில்க்கொள்ளாது எதிர்ப்படும் தடைகளை மோதி மிதித்துச் செல்லுங்கள் . அதுவே இயற்கையின் விதி. அதையே இயற்கையும் வேண்டி நிற்கின்றது.